தங்கம் விலை கடந்த 60 நாளில் மிகப்பெரிய மாற்றங்களை சந்தித்துள்ள காரணத்தால் சாமானிய மக்கள் தங்கத்தை வாங்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்தியாவில் அதிலும் குறிப்பாக தென்னிந்தியாவில் சிறுக சிறுக சேமித்த பணத்தை பெருமளவில் தங்கத்தை நீண்ட கால முதலீடாக செய்வது வழக்கம்.
ஆனால் கொரோனா தொற்றுக்கு பின்பு இந்திய குடும்பங்களின் சராசரி சேமிப்பும், வருமானமும் குறைந்துள்ளது அல்லது தேக்கம் அடைந்துள்ளது. இதேவேளையில் தங்கம் விலையும் அதிகரித்துள்ளதால் ரீடைல் சந்தையில் தங்கம் வாங்குவோர் எண்ணிக்கையும் பெரிய அளவில் சரிந்துள்ளது.

இந்த நிலையில் இன்று 10 கிராம் தங்கம் விலை MCX சந்தையில் 0.39 சதவீதம் உயர்ந்து 60,300.00 ரூபாயாக ஜூன் மாத ஆர்டரின் விலை அதிகரித்துள்ளது. இதேவேளையில் வெள்ளி விலை 0.58 சதவீதம் அதிகரித்து 74,755 ரூபாயாக உள்ளது. இன்றைய விலை உயர்வுக்கு மிக முக்கியமான காரணம் அமெரிக்க சந்தையில் ஏற்பட்ட மாற்றங்கள் தான்.
இந்த வாரம் அமெரிக்க சந்தையின் பணவீக்க தரவுகள் வெளியாகும் காரணத்தால் திங்கட்கிழமை அமெரிக்க சந்தை மந்தமான வர்த்தகத்தை பதிவு செய்தது மட்டும் அல்லாமல் தங்கம் மீதான முதலீட்டை அதிகரித்துள்ளது. தங்கம் விலை அதிகரிக்க முக்கிய காரணம் பணிவீக்க தரவுகள் அடிப்படையில் தான் அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் தனது நாணய கொள்கையில் வட்டி விகித உயர்வின் அளவுகளை முடிவு செய்யும்.

இதேவேளையில் இன்று டாலர் இன்டெக்ஸ் 0.1 சதவீதம் வரையில் சரிந்துள்ளது, இதன் மூலம் தங்கத்தை வெளிநாடுகளில் இருந்தும், டாலர் அல்லாமல் பிற நாணயங்களில் இறக்குமதி செய்வோருக்கு சாதகமாக அமைந்துள்ளது. கடந்த வாரம் அமெரிக்க வேலைவாய்ப்பு தரவுகள் வட்டி விகித உயர்வுக்கு வழிவகுத்த நிலையில், தற்போது முதலீட்டாளர்கள் பணவீக்க தரவுகளுக்காக காத்திருக்கின்றனர்.
சர்வதேச சந்தையில் இன்று ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1998.40 டாலருக்கு உயர்ந்துள்ளது, நேற்றைய வர்த்தகத்தில் 2002 டாலரில் இருந்து 1985 ரூபாய் வரையில் சரிந்துள்ளது. இன்று காலை முதல் தங்கம் மீதான முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வரும் காரணத்தால் தங்க நகை வாங்குவோர் உஷாராக செயல்பட வேண்டிய நிலை உருவாகியுள்ளது.


Click it and Unblock the Notifications