இந்திய ஐடி நிறுவனங்களுக்குத் தற்போது அதிகளவிலான வர்த்தகம் வெளிநாட்டில் இருந்து வர துவங்கியுள்ளது. குறிப்பாகக் கடந்த வாரம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வங்கித் துறை முதல் பல துறைகளில் மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும் என்றும், போட்டி தன்மையை அதிகரிக்க வேண்டும் என்றும் அமெரிக்க நிறுவனங்களிடம் தெரிவித்துள்ளார்.
இதனால் அமெரிக்காவில் இருக்கும் பல லட்சம் நிறுவனங்கள் தங்களது வர்த்தகத்தை டிஜிட்டல் தளத்திற்குக் கொண்டு வருவது மட்டும் அல்லாமல் பல்வேறு டெக் மேம்பாடுகளைச் செய்யத் துவங்கியுள்ளது.
இந்திய ஐடி நிறுவனங்கள்
இந்திய ஐடி நிறுவனங்கள் கடந்த ஒரு வருடமாக வரலாறு காணாத அளவிற்கு அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்று வரும் நிலையில், ஜோ பைடனின் அறிவிப்பு இந்திய நிறுவனங்கள் கேக் மீது இருக்கும் செர்ரி பழம் போல் இருந்தது.
ஆனால் ஒரு பிரச்சனை...?!
போட்டி அதிகரிப்பு
ஏற்கனவே இந்திய ஐடி நிறுவனங்கள் பெற்ற வர்த்தகத்தை விரைவாகச் செய்து முடிக்கப் போதுமான ஊழியர்கள் இல்லாமல் இருக்கும் காரணத்தால் திறன் வாய்ந்த மற்றும் அனுபவம் வாய்ந்த ஊழியர்களைப் பெறுவதில் நிறுவனங்கள் மத்தியிலான போட்டி அதிகரித்தது.
ஐடி ஊழியர்களுக்குப் பொற்காலம்
இந்தப் போட்டியில், தற்போது ஜோ பைடன் அறிவிப்புக்குப் பின் அதிகளவிலான வர்த்தகம் கிடைத்து வரும் காரணத்தால் இந்திய ஐடி நிறுவனங்களுக்குத் தலைவலியாகவும், ஐடி ஊழியர்களுக்குப் பொற்காலமாகவும் மாறியுள்ளது.
30 சதவீதம் சம்பள உயர்வு
பொதுவாக ஐடி ஊழியர்கள் ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாறும் போது அதிகப்படியாக 30 சதவீதம் சம்பள உயர்வு கொடுப்பது வழக்கம். ஆனால் திறன் வாய்ந்த மற்றும் அனுபவம் வாய்ந்த ஊழியர்களுக்கு டிமாண்ட் அதிகமாக இருக்கும் காரணத்தால் ஒன்றுக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் கிடைத்து வருகிறது.
70% வரை சம்பள உயர்வு
இதனால் ஐடி ஊழியர்கள் ஒரு நிறுவனத்தில் இருந்து மாற்றொரு நிறுவனத்திற்கு மாறும் போது 70 சதவீதம் வரையில் சம்பள உயர்வு கேட்பதாகவும், அதை எவ்விதமான மறுப்பும் இல்லாமல் நிறுவனங்கள் அளிக்கிறது. இதற்கிடையில் ஐடி ஊழியர்கள் பல நிறுவனங்களில் பணியைப் பெற்றும் அதிகச் சம்பளம் காரணமாகக் கைவிடும் நிலையும் இருக்கிறது.
இதுதான் பொற்காலம்
ஒரு நிறுவனத்தில் இருந்து மாற்றொரு நிறுவனத்திற்கு மாறும் போது 70 சதவீதம் சம்பள உயர்வு கிடைக்கும் போது, இதைப் பொற்காலம் என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்வது. 2 முதல் 3 வருடம் அனுபவம் கொண்ட ஊழியர்களே தற்போது 50 முதல் 70 சதவீதம் வரையில் சம்பள உயர்வை டிமாண்ட் செய்வதாக நாட்டின் பல முன்னணி வேலைவாய்ப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.
முக்கியத் தொழில்நுட்பங்கள்
குறிப்பாக SaaS, எட் டெக், ஹெல்த் டெக், கேமிங், செயற்கை நுண்ணறிவு, மெஷின் லேர்னிங், ஆட்டோமேஷன், டிஜிட்டல் டிரான்ஸ்பர்மேஷன், பிளாக்செயின், சைபர்செக்யூரிட்டி, சாப், 5ஜி, டேட்டா மேனேஜ்மென்ட், போன்ற தொழில்நுட்பத்தில் அனுபவம் வாய்ந்தவர்களுக்கு அதிகளவிலான சம்பள உயர்வு கிடைப்பதாகக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications