அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த 2ம் தேதியன்று, இந்தியா மற்றும் சீனா உள்பட சுமார் 150 நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதித்தார். குறிப்பாக சீனா பொருட்களுக்கு 54 சதவீதம் வரி விதித்தார். இதனையடுத்து சீனா அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அந்நாட்டு பொருட்களுக்கு 34 சதவீதம் வரி விதித்தது. இதற்கு பதிலடியாக டிரம்ப் நிர்வாகம், சீன பொருட்களுக்கான வரியை உயர்த்தியது.
இந்நிலையில் அண்மையில் சீனாவை தவிர்த்து இந்தியா உள்பட பிற நாடுகளுக்கான வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக டிரம்ப் அறிவித்தார். அதேசமயம் சீனா பொருட்களுக்கான வரியை மேலும் உயர்த்தினார். இதனையடுத்து இரு நாடுகளும் பதிலுக்கு பதில் வரியை உயர்த்தின. டிரம்ப் சீன பொருட்களுக்கான வரியை 245 சதவீதம் வரை உயர்த்தினார். இதனால் இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக போர் வெடிக்கும் அபாயம் அதிகரித்துள்ளது.

இதற்கிடையே அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட் பேட்டி ஒன்றில், சீனா பேச்சுவார்த்தை நடத்த விரும்பாதது வெட்கக்கேடானது. சர்வதேச வர்த்தக அமைப்பில் சீனர்கள் மிகவும் மோசமான குற்றவாளிகள். அவர்கள் இணக்கமாக வரவில்லை என்றால் அனைத்து விருப்பங்களும் மேசையில் உள்ளன. அமெரிக்க பங்குச் சந்தையில் சீன பங்குகளை பட்டியலிடுவதை நீக்கும் முடிவு டிரம்பின் கையில்தான் உள்ளது என்று தெரிவித்து இருந்தார்.
இதனால் அமெரிக்க பங்குச் சந்தைகளிலிருந்து சீன நிறுவனங்கள் அகற்றும் சாத்தியக்கூறு மீண்டும் எழுந்தது. இதற்கு முன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முதலாவது பதவி காலத்தின் போது, அமெரிக்க பங்குச் சந்தைகளிலிருந்து சீன நிறுவனங்கள் அகற்றும் சாத்தியக்கூறு எழுந்தது.
இந்நிலையில், அமெரிக்கா-சீனா இடையே நிதி பிரிவினை ஏற்பட்டால் அமெரிக்க முதலீட்டாளர்கள் ஒரு தீவிர சூழ்நிலையில் சுமார் 80,000 கோடி டாலர் மதிப்பிலான சீன பங்குகளை விற்பனை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படலாம் என்று கோல்ட்மேன் சாக்ஸ் குழுமம் எச்சரிக்கை செய்துள்ளது.
கோல்ட்மேன் சாக்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்க நிறுவன முதலீட்டாளர்கள் தற்போது 25,000 கோடி டாலர் மதிப்பிலான சீன ஏடிஆர்-களை வைத்திருக்கிறார்கள். இது மொத்த சந்தை மதிப்பில் 26 சதவீதத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. ஹாங்காங் சந்தையில் அமெரிக்க நிறுவன முதலீட்டாளர்கள் 52,200 கோடி டாலர் மதிப்புக்கு பங்குகளை வைத்திருக்கிறார்கள். அதே நேரத்தில் சீனாவின் ஏ பங்குகளில் 0.5 சதவீதத்தை பராமரிக்கிறார்கள்.
ஆக ஒட்டு மொத்தத்தில் அமெரிக்க நிறுவன முதலீட்டாளர்கள் சீன பங்குகளில் 80,000 கோடி டாலர் முதலீடு செய்துள்ளனர். அமெரிக்கா-சீனா இடையே நிதி பிரிவினை ஏற்பட்டால் அமெரிக்க முதலீட்டாளர்கள் ஒரு தீவிர சூழ்நிலையில் சுமார் 80,000 கோடி டாலர் மதிப்பிலான சீன பங்குகளை விற்பனை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.
அமெரிக்க முதலீட்டாளர்கள் ஒரே நாளில் ஏ பங்குகளை விற்பனை செய்து விட்டு வெளியேறி விடலாம். ஆனால் ஹாங்காங் பங்குகளுக்கு 119 நாட்களும், ஏடிஆர்களுக்கு 97 நாட்களும் தேவைப்படும். இந்த சூழ்நிலையில், சீன முதலீட்டாளர்கள் 1.7 லட்சம் கோடி டாலர் மதிப்பிலான அமெரிக்க சொத்துக்களை விற்பனை செய்ய வேண்டியது இருக்கும். இதில் 37,000 கோடி டாலர் மதிப்பிலான பங்குகளும், 1.3 லட்சம் கோடி டாலர் மதிப்பிலான பத்திரங்களும் அடங்கும் என்று தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications