இந்தியாவில் கோடிக்கணக்கான பிஎஃப் சந்தாதாரர்களுக்கு குட்நியூஸ் வெளியாகியுள்ளது. பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை இபிஎஃப்ஓ (EPFO) சந்தாதாரர்கள் UPI மற்றும் ஏடிஎம் கார்டுகள் மூலமாகவே நேரடியாக எடுப்பதற்கான புதிய வசதியை அறிமுகப்படுத்தும் இறுதி கட்டப் பணிகளில் மத்திய தொழிலாளர் அமைச்சகம் ஈடுபட்டுள்ளது.
புதிய 'EPFO 3.0' திட்டம் மூலம் 'Version 2.01 server' பயன்பாட்டுக்கு வந்தவுடன், தகுதியுள்ள உறுப்பினர்கள் தங்களின் ஆதார் மற்றும் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட UPI ஐடி அல்லது ஏடிஎம் கார்டுகளைப் பயன்படுத்தி நேரடியாக பிஎஃப் பணத்தை பெற்று கொள்ளலாம். இதனால் தேவையற்ற அலைச்சல்களும், வார கணக்கிலான காத்திருப்புகளும் குறையும். இந்த மாத இறுதிக்குள்ளாகவே பிஎஃப் பணத்தை யுபிஐ, ஏடிஎம் மூலம் எடுக்கும் வசதி நடைமுறைக்கு வந்துவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏனெனில் மத்திய தொழிலாளர் அமைச்சகம், பிஎஃப் அமைப்பு இணைந்து நடத்திய சோதனை ஓட்டம் வெற்றி அடைந்துள்ளது. இதனால் அனைத்து சந்தாதாரர்களுக்கும் இது விரைவில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. வழக்கமாக பிஎஃப் பணத்தை எடுக்க நாம் விண்ணப்பம், செய்துவிட்டு வார கணக்கில் காத்திருக்க வேண்டும். ஆனால் இந்த முறையில் நினைக்கும் போதெல்லாம் பணத்தை எடுத்து பயன்படுத்தலாம்.
புதிய விதிமுறைகளின்படி, தகுதியுள்ள சந்தாதாரர்கள் தங்களின் மொத்த பிஎஃப் சேமிப்பில் 50% முதல் 75% வரை மட்டுமே இந்த முறையில் எடுக்க அனுமதிக்கப்படலாம். உங்களின் மொத்த சேமிப்பில் குறைந்தது 25% பணம் கணக்கிலேயே லாக் செய்யப்படும். ஓய்வு காலத்திற்குப் பிறகு நிதிப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த 25% பணத்தை எடுக்க முடியாது.
புதிய EPFO 3.0 மூலம் 5 லட்சம் ரூபாய் வரையிலான பிஎஃப் அட்வான்ஸ் (Advance Claims) கோரிக்கைகள் அதிகாரிகள் தலையீடு இன்றி தானியங்கி முறையில் (Auto-settlement) விரைவாகச் செயலாக்கப்படும். அதாவது 5 லட்சம் ரூபாய் வரை விண்ணப்பித்த உடனே கிடைத்துவிடும் அதிகாரிகள் ஆய்வு , அனுமதி ஆகியவை எல்லாம் இருக்காது.
இந்த வசதியைப் பயன்படுத்த உங்களது பிஎஃப் கணக்கு தயாராக இருக்க பின்வரும் விஷயங்களை சரிபார்த்துக் கொள்வது நல்லது.
1. உங்களது யுஏஎன் (UAN) எண்ணுடன் ஆதார் கார்டை இணைக்க வேண்டும்.
2. EPFO போர்ட்டலில் வங்கி கணக்கு விவரங்களைச் சரிபார்த்து வைத்திருக்க வேண்டும்.
3. ஆதார், பான் (PAN) மற்றும் EPFO கணக்குகளில் உங்களது பெயர் மற்றும் விவரங்கள் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்.
4. வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட UPI ஐடியை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
இவற்றை தயாராக வைத்திருந்தால் உங்கள் பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை போல நினைத்த போதெல்லாம் எடுத்து செலவிட முடியும்.


Click it and Unblock the Notifications

