இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் சேவை நிறுவனமான டிசிஎஸ் கொரோனா காலத்திலும் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்று சக இந்திய ஐடி நிறுவனங்களுக்குக் கடுமையான போட்டியை அளித்தது.
இதுமட்டும் அல்லாமல் 2020ல் பல துறை தொழில்நுட்பத்தில் சேவைகளையும் டிசிஎஸ் துவங்கியுள்ளது. குறிப்பாகக் கிளவுட் சேவையை மாபெரும் இலக்குடன் விரிவாக்கம் செய்துள்ளது.
கொரோனா தொற்றுக் காரணமாக டிசிஎஸ் நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றினாலும், எவ்விதமான வர்த்தகப் பாதிப்பும் இல்லாமல் இயங்கி வருகிறது. இதனால் வர்த்தகத்திலும் வருமானத்திலும் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் உள்ளது.
இதைப் பாராட்டும் விதமாக இந்நிறுவனத்தின் 4.7 லட்சம் ஊழியர்களுக்கு 2021-22ஆம் நிதியாண்டுக்கான சம்பள உயர்வை அறிவித்துள்ளது.
டிசிஎஸ் சம்பள உயர்வு
கொரோனா தொற்றுக் காரணமாகக் கடந்த நிதியாண்டுக்கான சம்பள உயர்வை டிசிஎஸ் நிர்வாகம் தாமதமாக அளித்தது அனைவருக்கும் தெரியும். இதன் மூலம் கடந்த ஆண்டுக்கான சம்பள உயர்வு அக்டோபர் 1 முதல் அளிக்கப்பட்ட நிலையில் இந்த வருடம் தாமதமாகத் தான் சம்பள உயர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
6 மாதத்தில் 2வது சம்பள உயர்வு
ஆனால் சற்றும் எதிர்பாராத விதமாகக் கடந்த வருடத்திற்கான சம்பள உயர்வு அறிவித்து 6 மாத இடைவேளையில் 2021-22 நிதியாண்டுக்கான சம்பள உயர்வை அறிவித்து ஊழியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது டிசிஎஸ் நிர்வாகம். இதன் மூலம் தாமதமான சம்பள உயர்வு வட்டத்தில் இருந்து டிசிஎஸ் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.
டிசிஎஸ் சூப்பர் அறிவிப்பு
எப்போதும் டிசிஎஸ் நிர்வாகம் சராசரியாக 6 முதல் 8 சதவீத சம்பள உயர்வை மட்டுமே தனது ஊழியர்களுக்கு அளிக்கும் நிலையில் இந்த வருடம் 12 முதல் 14 சதவீதம் வரையிலான சம்பள உயர்வை அளிக்க உள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் வழக்கமாக அளிக்கப்படும் பதவி உயர்வுகளும் இதே ஏப்ரல் மாதம் முதல் அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் மாதத்தில் சம்பள உயர்வு
மேலும் இந்திய ஊழியர்களுக்கு மட்டும் அல்லாமல் உலகளவில் பணியாற்றும் அனைத்தும் டிசிஎஸ் ஊழியர்களுக்கும் ஏப்ரல் 2021 முதல் சம்பள உயர்வு அளிக்கப்படும் என அறிவித்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் 2021 நிதியாண்டில் டிசிஎஸ் நிறுவனத்தின் வருமான கணிப்புகள் கடந்த ஆண்டை விடவும் அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications