கொரோனா தொற்று 2வது அலையில் இந்தியாவில் வர்த்தகம் பாதிப்பு, பொருளாதாரத்தில் சரிவு எனப் பல காரணங்களால் கடந்த மாதம் மிகவும் மோசமாக வர்த்தகம் செய்யப்படும் நாணயமாகக் கருதப்பட்ட இந்திய ரூபாய், தற்போது 2 மாத சரிவில் இருந்து மீண்டு உள்ளது.
செவ்வாய்க்கிழமை வர்த்தக முடிவில் 72.78 ரூபாய்க்கு முடிவடைந்த ரூபாய் மதிப்பு இன்றைய வர்த்தகத்தில் 72. 65 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.
அமெரிக்காவின் பணவீக்கம்
அமெரிக்காவில் அதிகரித்துள்ள பணவீக்கம், பொருளாதார வளர்ச்சியில் இருக்கும் சிறு தடுமாற்றும், ஜோ பைடன் அரசு அறிவித்துள்ள இன்பரா ஊக்கத் திட்டம் ஆகியவை டாலர் மதிப்பின் வலிமையைக் கணிசமாகக் குறைத்துள்ளது. இதன் மூலம் அமெரிக்க டாலர் இண்டெக்ஸ் 0.3 சதவீதம் வரையில் சரிந்து 89.6 ஆக உள்ளது.
இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்
இந்தியாவில் தற்போது பல முன்னணி ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ஐபிஓ வெளியிடத் திட்டமிட்டுள்ள காரணத்தால் அதிகளவிலான டாலர் முதலீடுகள் இந்தியச் சந்தைக்குள் நுழைந்து வருகிறது. இதுமட்டும் அல்லாமல் இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பல வர்த்தக விரிவாக்கத்திற்காக அதிகளவிலான முதலீட்டை ஈர்த்து வருகிறது.
தொழிற்சாலைகள் மூடல்
மேலும் இந்தியாவில் கொரோனா தொற்றுக் காரணமாகப் பெரும்பாலான தொழிற்சாலைகள் மூடப்பட்டு உள்ளதால் உதிரி பாகங்கள் முதல் உற்பத்தி பொருட்கள் வரையில் அனைத்தின் இறக்குமதியும் பெரிய அளவில் குறைந்துள்ளது. இதனால் இந்திய இறக்குமதியாளர்கள் மத்தியில் டாலருக்கான தேவையும் கணிசமாகக் குறைந்துள்ளது.
அமெரிக்கப் பெடரல் ரிசர்வ்
இந்நிலையில் அமெரிக்காவில் அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் விரைவில் தனது நாணய கொள்கையை மறு சீரமைப்புச் செய்து வட்டி விகிதத்தை உயர்த்த அதிகளவிலான வாய்ப்புகள் உள்ள காரணத்தால் டாலர் மதிப்பு சரிந்து வருகிறது என ஐசிஐசிஐ டைரெக்ட் ரிசர்ச் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications