ஆசிய சந்தையில் சிறப்பான வளர்ச்சி பதிவாகியுள்ளதன் மூலம் இன்று மும்பை பங்குச்சந்தை வர்த்தகம் மிகவும் சிறப்பாக இருக்கும் காரணத்தால் அனைத்து முன்னணி நிறுவனங்களும் அதிகப்படியான வளர்ச்சியைப் பதிவு செய்து வருகிறது.
இந்நிலையில் டாடா மோட்டார்ஸ் மற்றும் டைட்டன் நிறுவன பங்குகள் இன்று மாபெரும் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ள காரணத்தால் முதலீட்டாளர்கள் அதிகளவிலான லாபத்தைப் பதிவு செய்துள்ளனர்.
டைட்டன்
டாடா குழுமத்தின் தங்கம் மற்றும் பேஷன் பொருட்கள் விற்பனை நிறுவனமான டைட்டன் செப்டம்பர் மாதத்தில் சிறப்பான வர்த்தக வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாகவும், இந்நிறுவனத்தில் பெரும்பாலான வர்த்தகப் பிரிவுகள் கொரோனாவுக்கு முந்தைய அளவீடு அல்லது அதற்கு அதிகமான வர்த்தக வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்
இது மும்பை பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் வாயிலாக டைட்டன் நிறுவன பங்குகள் இன்று அதிகப்படியாக 11.5 சதவீதம் வரையில் உயர்ந்து ஒரு பங்கு விலை 2,378.35 ரூபாய் அளவீட்டைத் தொட்டு உள்ளது. இதன் மூலம் டைட்டன் நிறுவனப் பங்குகள் 52 வார உயர்வை அடைந்து முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
ரூ.2 லட்சம் கோடி சந்தை மதிப்பீடு
இதன் மூலம் டைட்டன் நிறுவனம் முதல் முறையாக இன்று 2 லட்சம் கோடி ரூபாய் அளவிலான சந்தை மதிப்பீட்டை அடைந்துள்ளது. டாடா குழுமத்தில் 2வது நிறுவனமாக 2 லட்சம் கோடி மதிப்பீட்டைத் தொட்டு உள்ளது டைட்டன். இதற்கு முன்பு டிசிஎஸ் நிறுவனம் இந்த அளவீட்டை அடைந்தது குறிப்பிடத்தக்கது.
ஜேபி மோர்கன்
இது மட்டும் அல்லாமல் ஜேபி மோர்கன் உட்படப் பல நிறுவனங்கள் டைட்டன் நிறுவனப் பங்கின் டார்கெட் விலையைப் பெரிய அளவில் உயர்த்தியுள்ளது. இதற்கு மிக முக்கியக் காரணம் இந்நிறுவனத்தின் வர்த்தக அளவீடுகள் தான். தற்போது வெளியாகியுள்ள கணிப்பின் படி 2வது காலாண்டில் டைட்டன் 64 சதவீத உயர்வில் 7,100 கோடி ரூபாய் வருமானத்தையும், லாபத்தின் அளவு 550 கோடி ரூபாயாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது. இது கடந்த காலாண்டில் 200 கோடி ரூபாயாக இருந்தது.
டாடா மோட்டார்ஸ்
இதேபோல் டாடா மோட்டார்ஸ் பங்குகள் இன்று அப்பர் சர்கியூட் அளவான 10 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்து 369.60 ரூபாய் என்ற புதிய உச்சத்தைப் பதிவு செய்துள்ளது. இந்தத் தடாலடி உயர்வுக்கு மிக முக்கியக் காரணம் டாடா மோட்டார்ஸ் சென்னையில் இருக்கும் போர்டு தொழிற்சாலையைக் கைப்பற்றுவது குறித்து வெளியான தகவல்கள் தான்.
2வது இடம்
இன்றைய வர்த்தகத்தின் மூலம் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு 1.23 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ளது. இதனால் இந்தியாவின் டாப் ஆட்டோமொபைல் பட்டியலில் டாடா மோட்டார்ஸ் சந்தை மதிப்பீட்டின் படி 2வது இடத்தைப் பிடித்துள்ளது.
20 சதவீத லாபம்
இவ்விரு நிறுவனத்தின் உயர்வால் டாடா முதலீட்டாளர்களுக்கு அதிகளவிலான லாபம் கிடைத்துள்ளது, சருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் டைட்டன் மற்றும் டாடா மோட்டார்ஸ் முதலீட்டாளர்களுக்கு இன்று காலை வர்த்தகத்தில் மட்டும் சுமார் 20 சதவீத லாபம் கிடைத்துள்ளது.


Click it and Unblock the Notifications