உலகின் மிகப்பெரிய டெக்னாலஜி நிறுவனமான கூகுள் ஏற்கனவே இந்திய டெலிகாம் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் சுமார் 33,500 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது, ஆயினும் தற்போது மற்றொரு டெலிகாம் சேவை நிறுவனமான ஏர்டெல் நிறுவனத்தில் கூகுள் சுமார் 7500 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது.
இந்தத் திடீர் முதலீடு எதற்காக..? கூகுள் - ஏர்டெல் முதலீடு இந்தியாவில் எந்த அளவிற்குத் தாக்கத்தை ஏற்படுத்தும்..?
கூகுள் - ஏர்டெல் முதலீடு
அமெரிக்க நிறுவனமான கூகுள், ஏர்டெல் நிறுவனத்தில் 700 மில்லியன் டாலர் நிதி முதலீடாகவும், 300 மில்லியன் டாலர் வர்த்தக வாயிலாக முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. ஏர்டெல் நிறுவனத்தில் கூகுள் முதலீடு செய்ய மிக முக்கியமான காரணம் இந்தியாவில் கிளவுட் சேவையைப் பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பதற்காகத் தான்.
கிளவுட் சேவை
கிளவுட் சேவை பிரிவில் ஏற்கனவே அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்று வரும் மைக்ரோசாப்ட் மற்றும் அமேசான் வெப் சர்வீசஸ் ஆகியவற்றுடன் போட்டிப்போடவே இந்தப் புதிய முதலீடு செய்யப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.
டெலிகாம் வாடிக்கையாளர்கள்
தற்போது கூகுள் நிறுவனம் ஏர்டெல் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது மூலம் இந்தியாவில் இருக்கும் சிறு மற்றும் நடுத்தர வர்த்தகங்களுக்கான கிளவுட் மற்றும் இதர டிஜிட்டல் சேவைகளை அளிக்க முடியும். ஏற்கனவே ஏர்டெல் நிறுவனத்தில் அதிகப்படியான டெலிகாம் வாடிக்கையாளர்கள் இருக்கும் நிலையில் வர்த்தகங்களுக்கான கிளவுட் சேவையை வேகமாகவும் விரைவாகவும் விரிவாக்கம் செய்ய முடியும் எனக் கூகுள் நம்புகிறது.
கிளவுட் சேவை வளர்ச்சி
ரீடைல் முதல் வர்த்தகங்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் கிளவுட் சேவை அளிப்பதில் அமேசான் மற்றும் மைக்ரோசாப்ட் முன்னோடியாக இருக்கும் நிலையில் கூகுள் இப்பிரிவில் தனக்கான இடத்தைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக இப்பிரிவு வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய இந்தியாவில் மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் முதலீடு செய்து வருகிறது.
ஏர்டெல் நிறுவனம்
ஏர்டெல் நிறுவனம் தற்போது 2000 பெரிய நிறுவனங்களுக்கு, 1 கோடிக்கும் அதிகமான சிறு வர்த்தகங்களுக்கும் டெலிகாம் மற்றும் இதர டிஜிட்டல் சேவைகளை அளித்து வருகிறது. இந்நிலையில் ஏர்டெல் - கூகுள் 1 பில்லியன் டாலர் முதலீடு இரு தரப்புக்கும் அதிக லாபம்.


Click it and Unblock the Notifications