கூகுள் நிறுவனத்தின் இஸ்ரேல் ஒப்பந்தத்தைக் கண்டித்து போராட்டம் நடத்திய ஊழியர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் அமெரிக்க உலக ஊழியர்கள் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியின்படி, நியூயார்க் மற்றும் கலிபோர்னியாவின் சன்னிவேல் ஆகிய இடங்களில் உள்ள கூகுள் அலுவலகங்களில் போராட்டம் நடத்திய ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போராட்டத்தின் காரணம்: காசா-வில் நடக்கும் வன்முறைக்கு மத்தியில், இஸ்ரேலுடன் கூகுள் நிறுவனம் மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்தைக் கண்டித்து இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, கிளவுட் சேவைகள் மற்றும் டேட்டா சென்டர் அமைப்பதற்காக 1.2 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தை இஸ்ரேலுடன் கூகுள் நிறுவனம் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தை கண்டித்து, கூகுள் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் மற்றும் கைது: கூகுள் நிர்வாகத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்திய சுமார் 9 ஊழியர்கள் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போராட்டக்காரர்கள் அலுவலகத்தை விட்டு வெளியேற மறுத்ததால், நியூயார்க் போலீசார் வரவழைக்கப்பட்டு அவர்களை கைது செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கூகுள் ஊழியர்கள் கைது செய்யப்படும் காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்றையும் போராட்டக்காரர்கள் சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளனர். அதில், அலுவலகத்தை விட்டு வெளியேறாவிட்டால் கைது செய்யப்படுவீர்கள் என்று காவல் துறையினர் போராட்டக்காரர்களிடம் கூறுவதும், போராட்டக்காரர்கள் அலுவலகத்தை விட்டு வெளியேற மறுத்ததால் கைது செய்யப்பட்டுள்ளதை காண முடிகிறது.
கூகுள் நிறுவனத்தின் நிலைப்பாடு: கைது செய்யப்பட்ட ஊழியர்கள் நிறுவனத்தின் நிர்வாக விடுப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும், நிறுவனத்தின் அமைப்புகளை அவர்கள் பயன்படுத்துவதைத் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் கூகுள் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் பேலி டாம்சன் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், பலமுறை கேட்டும் அலுவலகத்தை விட்டு வெளியேற மறுத்ததால், பாதுகாப்பு காரணமாகக் காவல் துறையினர் அழைக்கப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டதாக அவர் கூறினார்.
போராட்டக்காரர்களின் கோரிக்கை: கூகுள் நிறுவனம் இஸ்ரேலுடன் செய்துள்ள ஒப்பந்தத்தை முழுவதுமாக கைவிடும் வரை போராட்டத்தைக் கைவிட மாட்டோம் என்று கூகுள் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். Nimbus என்று பெயரிடப்பட்ட இந்த ஒப்பந்தம் 2021 ஆம் ஆண்டில் கையெழுத்திடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பிற நிறுவனங்கள்: இஸ்ரேல் அரசுடன் கூகுள் நிறுவனத்துடன் மட்டுமல்லாமல் அமேசான் நிறுவனத்துடனும் இதேபோன்ற ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், இஸ்ரேலில் கூகுள் உயர் அதிகாரியின் உரையின் போது காசா தாக்குதல் குறித்து எதிர்ப்பு தெரிவித்ததற்காகவும், பேசியதற்காகவும் கூகுள் ஒரு தொழிலாளியை பணிநீக்கம் செய்ததாகக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications