சென்னை: இந்த ஆண்டுக்கான கூகுள் I/O 2024 நிகழ்வு கடந்த மே மாதம் நடந்தது. அந்த நிகழ்வில் பயனர்களின் ஃபோன்களையும் தரவுகளையும் மோசடிகளில் இருந்து பாதுகாக்கும் தெப்ஃட் டிடெக்ஷன் லாக் (Theft detection lock) அம்சத்தை கூகுள் அறிமுகப்படுத்தியது. குறிப்பாக, செல்போன் திருட்டு விகிதங்கள் மிக அதிகமாக இருக்கும் பிரேசிலில் உள்ள பயனர்களின் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு, இந்த புதிய அம்சத்தை கூகுள் வெளியிட்டுள்ளது. இந்த புதிய அம்சம் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் (AI) தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. இதன் மூலம் திருட்டுப் போகும் மொபைல் போன்களை எளிதில் லாக் செய்துவிடலாம் என்று கூறப்படுகிறது.
பிரேசிலில் 1 நிமிடத்திற்கு சுமார் 2 செல்போன்கள் திருடப்படுவதாக கூகுள் தெரிவித்துள்ளது, இதனைக் கருத்தில் கொண்டு, இந்த புதிய திருட்டு தடுப்பு அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

தெப்ஃட் டிடெக்ஷன் லாக் (Theft Detection Lock): ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, யாராவது உங்கள் ஃபோனை திடீரென்று பறித்து கொண்டு ஓட முயற்சிக்கிறார்களா என்பதை கூகுள் நிறுவனத்தின் இந்த புதிய அம்சம் கண்டறிந்து உடனடியாக உங்கள் ஃபோனின் திரையை லாக் செய்து விடும். உங்கள் ஃபோனை திருடிக் கொண்டு திருடர்கள் ஓடினாலோ அல்லது சைக்கிளில் வேகமாக சென்றாலோ இந்த AI தொழில்நுட்பம் கண்டுபிடித்துவிடும். அது மட்டுமின்றி சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகளைக் கண்டறியவும், திருடர்கள் உங்கள் தரவுகளை திருட முயற்சிப்பதைத் தடுக்கவும் தெப்ஃட் டிடெக்ஷன் லாக் பயன்படுகிறது.
விரைவான மற்றும் எளிதான ரிமோட் லாக்: புதிய ரிமோட் லாக் அம்சத்தின் மூலம், சிக்கலான பாஸ்வேர்டுகளை நினைவில் வைத்துக் கொள்ளலாம். இதனால் தொந்தரவு இல்லாமல் உங்கள் தொலைந்த அல்லது திருடப்பட்ட தொலைபேசியைப் பாதுகாக்கலாம். உங்கள் கூகுள் கணக்கு விவரங்களுக்கு தடுமாறுவதற்குப் பதிலாக, உங்கள் டிஸ்ப்ளேவை ரிமோட் மூலம் லாக் செய்யலாம். உங்கள் தொலைபேசி எண்ணையும் மற்றொரு டிவைஸ்-ஐ லாக் செய்வதற்குப் பயன்படுத்தலாம். இது உங்கள் நேரத்தை மிச்சப்படுத்துகிறது. மேலும் தேவைப்பட்டால், உங்கள் டிவைஸில் உள்ள அனைத்து தகவல்களையும் சுத்தமாக நீங்கள் அழித்துவிடலாம். இதன் மூலம் திருடர்கள் உங்களுடைய விவரங்களைத் தெரிந்து கொள்ளாமல் இருப்பார்கள்.
ஆஃப்லைன் லாக்: திருடர்கள் உங்கள் ஃபோனை எடுத்துக்கொண்டு உங்கள் நெட்வொர்க்கை துண்டிக்க முயற்சித்தால், ஆப்லைன் லாக் வசதியை பயன்படுத்தலாம். இதன் மூலம் உங்களுடைய டிவைஸ் நெட்வொர்க்கில் இணைக்கப்படாமல் இருந்தாலும் இணைக்கப்பட்டு இருந்தாலும் உங்களுடைய விவரங்களைப் பாதுகாக்க முடியும். மேலும் உங்கள் டிவைஸ்-ஐ திறக்க பலமுறை முயற்சிகள் செய்யப்பட்டாலும், நீங்கள் அந்த ரிமோட்டை வைத்து உங்களுடைய டிவைஸை லாக் செய்யலாம்.
பிரேசில் பயனர்கள் முதலில் இந்த புதிய திருட்டு தடுப்பு அம்சங்களை சோதித்துப் பார்ப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அம்சங்கள் விரைவில் உலகளவில் அனைத்து ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் கிடைக்கும் என்று கூகுள் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications