கூகுள் AI சாட்போட் ஜெமினி-யின் படத்தை உருவாக்கும் திறனை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது, இது பயனர் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போது இனரீதியாகச் சார்புடைய படங்களை ஜெனரேட் செய்துள்ளது. இந்தப் பிரச்சனைக்குக் கூகுள் தரப்பில் மன்னிப்புக் கேட்டுள்ளது. உண்மையில் என்ன பிரச்சனை..?
கூகுள் நிறுவனத்தின் ஏஐ சாட்பாட் தளமான ஜெமினி, ஓபன்ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி (ChatGPT) உடன் போட்டிப்போட்டு வருகிறது. இந்தப் போட்டியில் வேகமாக முன்னேற வேண்டும் என்பதற்காகச் சமீபத்தில் ஏஐ இமேஜ் ஜெனரேட்டர் சேவையைக் கூகுள் ஜெமினி தளத்தில் அறிமுகம் செய்தது. இங்கு தான் பிரச்சனை.

X தளத்தில் EndofWokeness என்ற கணக்கில் பகிரப்பட்டுப் பதிவு தற்போது பெரும் பிரச்சனையாக வெடித்துள்ளது. இந்தப் பதிவில் 'அமெரிக்காவின் ஸ்தாபன தந்தையின் உருவப்படம்' என்ற கேள்விக்குப் பதிலளிக்கும் போது, நேடிவ் அமெரிக்கன் பாரம்பரிய தலைக்கவசம் அணிந்த ஒரு பூர்வகுடி அமெரிக்கப் புகைப்படத்தையும், கறுப்பு இனத்தைச் சேர்ந்த ஒரு ஆண் புகைப்படத்தையும், கருப்பு நிறத்தினைக் கொண்ட ஒரு வெள்ளை அல்லாத ஆண், ஆசிய பகுதியை சேர்ந்த ஒரு ஆண் புகைப்படங்களைக் காட்டியுள்ளது எனப் பதிவிட்டுள்ளார்.
இந்தப் பதிவில் காட்டப்படும் படங்களில், அமெரிக்காவின் நிறுவனத் தந்தையர்களாக அறியப்படும் ஜார்ஜ் வாஷிங்டன், தாமஸ் ஜெஃபர்சன், பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் போன்றோர் இல்லாமல் இருப்பது தான் முக்கியப் பிரச்சனை.
கூகுளின் ஜெமினி தளத்தின் இத்தகைய பதில் மூலம் இது வரலாற்றுத் திருத்தமா, உண்மையான பன்முகத்தன்மையை வெளிப்படுத்துவதா அல்லது தவறான சித்தரிப்பா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துக்கள் பரவி வருகின்றன.
இந்த நிலையில் தான் கூகுள் நிறுவனம், அதன் செயற்கை நுண்ணறிவு Chatbot தளமான ஜெமினி (Gemini) மூலம் உருவப்படுத்தப்படும் படங்களில் இன ரீதியான பாகுபாடு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, இந்தச் சேவையைத் தற்காலிகமாக நிறுத்த கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை உத்தரவிட்டு உள்ளார்.
ஏற்கனவே சாட்ஜபிடி உடன் போட்டிப்போட முடியாமல் திணறி வரும் கூகுள், இந்தப் புதிய இன ரீதியான பாகுபாடு குற்றச்சாட்டுகள் அதன் ஏஐ வளர்ச்சியைக் கடுமையாகப் பாதித்துள்ளது. இது சுந்தர் பிச்சைக்குப் பெரும் சவாலாக இருக்கும் என்பதில் எவ்விதமான சந்தேகமுமில்லை.
மேலும், கூகுள் இந்தப் பிரச்சனையைச் சரி செய்து அப்டேட் வெர்ஷனை விரைவில் வெளியிடும் என அறிவித்துள்ளது. இந்தச் சம்பவத்தை வாய்ப்பாக்கப் பார்த்த டெக் தொழிலதிபர் எலோன் மஸ்க், கூகுளின் "செயற்கை நுண்ணறிவு திட்டமிடலில் இனவெறித்தனமும், நாகரிகமற்ற அணுகுமுறையும் பின்பற்றப்படுகிறது" எனக் கடுமையாக மொழியில் டிவீட் செய்தார்.
“கூகுளின் செயற்கை நுண்ணறிவு பட உருவாக்கம் அவர்களின் இனவெறித்தனமான, நாகரிகமற்ற திட்டமிடலை அனைவருக்கும் தெளிவுபடுத்தியிருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்,” என்று மஸ்க் கூகுளைக் குறிவைத்து மற்றொரு பதிவில் கமெண்ட் செய்தார்.
AI சாட்பாட் தளமான ஜெமினியின் பட உருவாக்கத்தில் காணப்படும் பாகுபாடு பிரச்சனையைக் கூகுள் நிறுவனம் ஒப்புக்கொண்டது. இது தொடர்பாகக் கூகுள் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ஜெமினி உருவாக்கப் பயன்படுத்தப்பட்ட பயிற்றுத் தரவுகளில் குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது, என்றும்...
ஜெமினி மூலம் உருவாக்கப்படும் சில வரலாற்றுப் படங்களில் பிழைகள் இருப்பதை அறிவோம். இதுபோன்ற சித்தரிப்புகளை உடனடியாக மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஜெமினி பல்வேறு தோற்றமுடைய மக்களின் முகத்தைத் தனது ஏஐ இமேஜ் ஜெனரேட்டர் உருவாக்கினாலும், உலகமெங்கும் உள்ள மக்கள் இதைப் பயன்படுத்துவதால் இது பொதுவாக நல்ல விஷயம்தான். ஆனால், இந்த விஷயத்தில் இது தவறான பாதையில் சென்றுவிட்டது," என்று கூகுள் மேலும் விளக்கம் அளித்துள்ளது.


Click it and Unblock the Notifications