சான் பிரான்சிஸ்கோ, அமெரிக்கா: உலகின் முன்னணி டெக் நிறுவனமான கூகுள் தங்கள் நிறுவனத்தில் ஊழியர்களை பணிக்கு தேர்வு செய்வதில் இது நாள் வரை கடைபிடித்து வந்த பன்முகத்தன்மையை கைவிடுவதாக அறிவித்திருப்பது சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலக அளவில் பன்முகத் தன்மை கொண்ட பணியாளர்களை கொண்டிருக்கும் நிறுவனமாக கூகுள் செயல்பட்டு வருகிறது .அந்த வகையில் முழுக்க முழுக்க ஒருவருடைய திறமை அடிப்படையாகக் கொண்டே வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது. கூகுள் நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் அனைவரும் பல்வேறு பிரிவுகளில் இருந்து வந்தவர்களாக இருப்பர் . இந்த நிலையில் தன்னுடைய பன்முகத்தன்மை வாய்ந்த பணியாளர்கள் சூழல் என்ற இலக்கை மாற்றி இருப்பதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் கூகுள் நிறுவனம் தன்னுடைய ஆட்கள் தேர்வு முறையில் பெரிய மாற்றத்தை கொண்டு வர இருப்பது தெரியவந்துள்ளது . அதிபர் டொனால்ட் டிரம்ப் தான் இந்த நடவடிக்கைக்கு காரணம் என சொல்லப்படுகிறது. அண்மையில் தான் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அரசோடு இணைந்து செயல்படக்கூடிய வணிகங்கள் மற்றும் அரசு தொழிலாளர்களில் பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் அனைவரும் உள்ளடக்கிய (Diversity, equity, and inclusion) என்ற கொள்கை அகற்றப்படுவதாக கூறியிருந்தார்.
மேலும் இந்த நடைமுறையை பின்பற்றாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார். இதனை அடுத்து தான் கூகுள் நிறுவனம் இப்படி ஒரு முடிவினை எடுத்து இருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக கூகுள் நிறுவனம் ஊழியர்களுக்கு அனுப்பி உள்ள குறிப்பில் அனைத்து ஊழியர்களும் சமமான வாய்ப்பையும் சமமான வெற்றியையும் பெற வேண்டும் என்பதற்கான ஒரு பணி சூழலை உருவாக்குவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் ஆனால் அரசின் ஒப்பந்தம் பெற்றுள்ள நிறுவனமாக இருப்பதால் அரசு கொண்டுவந்துள்ள மாற்றங்களுக்கு ஏற்ப நிறுவனத்திலும் மாற்றங்களை கொண்டு வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.
அண்மையில் அரசு வெளியிட்ட உத்தரவு அடிப்படையில் நம்முடைய பணியாளர் தேர்வு முறையில் மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக அமேசான் ,மெட்டா, வால்மார்ட் ஆகிய நிறுவனங்களும் இந்த Diversity, equity, and inclusion என்ற அனைவரையும் உள்ளடக்கிய பணி சூழல் என்ற கொள்கையில் இருந்து விலகி விட்டதாக அறிவித்துள்ளன. இது அமெரிக்காவின் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பின்னாளில் பேராபத்தாக அமையும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications