டெக் துறையை ஆட்டிவைத்த பணிநீக்கம் சீசன் 2 வருடமாகியும் இன்னும் ஓயவில்லை என்பது பெரும் அதிர்ச்சியாகவே உள்ளது. ஏற்கனவே மந்தமான பொருளாதாரம், பணவீக்கம் ஆகியவற்றின் காரணமாகச் சந்தையில் டெக் சேவைக்கான டிமாண்ட் மிகவும் குறைவாக உள்ளது.
இந்த நிலையில் டெக் உலகில் ஜாம்பவானாக இருக்கும் கூகுள் நிறுவனம் மீண்டும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை அறிவித்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் முடிவை எடுத்துள்ளது. ஏற்கனவே சுந்தர் பிச்சை 2024ல் கூகுள் நிறுவனத்தில் பணிநீக்கம் இருக்கும் என எச்சரித்திருந்தார்.

கூகிள் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி ரூத் போரட், நிறுவனத்தின் பணிநீக்க முடிவுகள் குறித்து இதில் பாதிக்கப்படும் ஊழியர்களுக்கு ஈமெயில் மூலம் அறிவித்தார். தற்போதைய பணி நீக்கங்கள் அதிகப்படியாகக் கூகுள் நிதித்துறையைச் சேர்ந்த ஊழியர்களைப் பாதிக்க உள்ளது என்பதையும் விளக்கினார்.
"செயற்கை நுண்ணறிவுடன் தொழில்நுட்ப துறை மிகப்பெரிய மாற்றத்தைச் சந்தித்து வருகிறது" என்று ரூத் போரட் எழுதிய ஈமெயிலில் தெரிவித்துள்ளார். மேலும் தனது ஈமெயில், மாற்றம் கடினமானது என்றும், ஊழியர்களைப் பணி நீக்கம் செய்த பிறகு நிறுவனம் வருத்தமடைகிறது என்றும் போரட் தெரிவித்துள்ளார். இந்த பணிநீக்க நடவடிக்கையில் எத்தனை ஊழியர்கள் பணி இழக்கின்றனர் என்பதை கூகுள் நிறுவனம் உறுதிப்படுத்தவில்லை.
AI சேவையை மக்கள் வாழ்க்கையை எளிதாக்கியுள்ளது மட்டும் அல்லாமல் மனிதர்கள் செய்யும் பல வேலைகளை AI அசால்டாக செய்து முடிக்கிறது. குறிப்பாகக் கணக்கீடுகள், தினமும் செய்ய வேண்டிய வேலைகள் என அனைத்தையும் நொடியில் செய்கிறது.
இதேபோல் கூகுள் தற்போது தனது முதலீட்டை மொத்தமும் ஏஐ பக்கம் திருப்பியுள்ளதும், இந்த பணிநீக்கங்களும் முக்கியமான காரணம்.
கூகுளின் இந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மூலம் ஏற்படும் பணிநீக்கம் ஆசியா-பசிபிக், ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள் உட்பட உலகளவில் பல்வேறு பிராந்தியத்தில் இருக்கும் ஊழியர்களைப் பாதிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதேவேளையில் பெங்களூரு, டிப்லின், மெக்சிகோ, அட்லாண்டா மற்றும் சிகாகோ ஆகிய இடங்களில் சென்டரலைஸ்டு மையங்களை உருவாக்கக் கூகுள் திட்டமிட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டில் தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடர்ந்து ஊழியர்களை சிறுசிறு எண்ணிக்கையில் குறைத்து வருகின்றன. டெஸ்லா, ஆப்பிள் மற்றும் அமேசான் போன்ற நிறுவனங்கள் தொடர்ந்து மறுசீரமைப்பு திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன.
2023 ஆம் ஆண்டு பணிநீக்கத்தைப் போல் இல்லாவிட்டாலும், 2024 ஆம் ஆண்டில் இதுவரையில் டெக் நிறுவனங்களில் 58000 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.


Click it and Unblock the Notifications