டெக் உலகின் முன்னணி நிறுவனமான கூகுள், தனது வருடாந்திர டெவலப்பர் மாநாடு இன்னும் சில வாரங்களில் நடக்க இருக்கும் வேளையில் அதிரடியாக பணிநீக்க அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. டெக் உலகில் பல முன்னணி பணிநீக்கத்தை நிறுத்திவிட்டாலும், கூகுள் நிறுவனத்தின் ஒவ்வொரு பிரிவையும், ஒவ்வொரு துறையை ஆய்வு செய்து தேவைக்கு அதிகமாக இருக்கும் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகிறது.
இதற்கிடையில் கூகுள் நிறுவனத்தின் ஏஐ பயன்பாடு நிறுவனத்தின் சேவைகளில் அதிகரித்துள்ள காரணத்தால், பல பணிகளை ஆட்டோமேட் செய்யப்பட்டு ஊழியர்களின் தேவையையும், அவசியத்தையும் குறைத்துள்ளது. இதுவும் கூகுள் தொடர்ந்து பணிநீக்கம் செய்வதற்கான முக்கிய காரணமாக உள்ளது.

கூகுள் நிறுவனத்தின் தற்போதைய பணிநீக்கத்தில் Flutter, Dart மற்றும் Python குழுக்களில் இருந்து பணியாளர்களை வெளியேற்றம் செய்துள்ளதாக TechCrunch தெரிவித்துள்ளது. சமூக வலைத்தளங்களில் கூகுள் நிறுவனத்தில் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் கண்ணீர் மல்கப் பதிவிட்டு உள்ளனர்.
இந்த பணிநீக்கம் குறித்து கூகுள் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், நிர்வாகம் எதிர்கால வாய்ப்புகளுக்குத் தயாராகுவதற்காக, 2023 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் இருந்து 2024 ஆம் ஆண்டு வரையில் அனைத்து டீம்-களிலும் மாற்றங்களைச் செய்து வருவதாகவும், மேலும் திறமையாகச் செயல்பட இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் TechCrunch தளத்திற்குத் தெரிவித்துள்ளார்.
இந்த பணிநீக்கம் நிறுவனம் முழுவதும் நடைபெறுவதில்லை என்று கூகுள் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட ஊழியர்கள் நிறுவனத்தில் வேறு காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க வாய்ப்புகள் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் கூகுள் நிறுவனத்தின் தலைவர் சுந்தர் பிச்சை 2024ஆம் ஆண்டிலும் பணிநீக்கம் இருக்கும் என முன்கூட்டியே எச்சரித்த நிலையில் கருணையே இல்லாமல் ஊழியர்கள் ஒவ்வொரு மாதமும் பணிநீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர்.
2023 ஆம் ஆண்டில் நடைபெற்ற பணிநீக்கம் அனைத்தும் நிறுவனத்தின் செலவுகளைக் குறைக்கும் நோக்கில், கூகுள் நிறுவனம் தங்களது ரியல் எஸ்டேட் மற்றும் நிதித் துறைகளில் பணிநீக்கங்களைச் செயல்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 2024 ஆம் ஆண்டில் நடைபெறும் பணிநீக்கம் அனைத்தும் நிறுவனம் வேகமாக இயங்கவும், முடிவுகளை விரைவாக எடுக்கவும் நிர்வாக கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக எடுக்கப்பட்டு வருகிறது.
மறுசீரமைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, பெங்களூர், மெக்சிகோ நகரம் மற்றும் டப்ளின் போன்ற இடங்களில் உள்ள எங்கள் "வளர்ச்சி மையங்களை" விரிவுபடுத்துவோம் என்று கூகுள் நிதித் தலைமை அதிகாரி ருத் போராட்ட ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
செயற்கை நுண்ணறிவு திறன்களை வளர்ப்பதில் கவனம் செலுத்தும் வகையில், இந்த ஆண்டின் தொடக்கத்தில், பொறியியல், வன்பொருள் மற்றும் உதவியாளர் குழுக்கள் உட்பட பல்வேறு குழுக்களில் இருந்து நூற்றுக்கணக்கான பணியாளர்களைக் கூகுள் நிறுவனம் பணி நீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications