பெங்களூரு: இந்தியாவில் சென்னை, பெங்களூர், மும்பை போன்ற பெரு நகரங்களுக்கு எல்லாமே மிகப்பெரிய சவாலாக இருப்பவை போக்குவரத்து நெரிசல். குறிப்பாக அலுவலக மற்றும் பள்ளி, கல்லூரி நேரங்களில் பிக் அவர்ஸ்களில் சாலைகளில் வாகனங்கள் ஆமை வேகத்தில் தான் ஊர்ந்து செல்கின்றன. நகரங்களில் வாகனத்தில் செல்வதை விட நடந்து சென்றாலே நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு சீக்கிரமாக சென்று விடலாம் என்ற நிலைமை வந்துவிடும் என நாம் கிண்டலாக கூறுவோம். தற்போது கூகுள் மேப் கூட இதை தான் சொல்கிறதாம்.
இந்தியாவிலேயே கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கு பெயர் போன நகரம் தான் பெங்களூரு. இங்கே போக்குவரத்து நெரிசலை கடந்து ஒரு இடத்திற்கு சென்று வருவது மிகப்பெரிய போராட்டமாக இருந்து வருகிறது.

தினமும் பல மணி நேரம் போக்குவரத்திலேயே பலருக்கு சென்று விடுகிறது. இவ்வாறு போக்குவரத்து நெரிசலில் சிக்கி இருக்கும்போது சிலர் போட்டி தேர்வுகளுக்கு படிப்பது, அலுவலக மீட்டிங்கில் கலந்து கொள்வது என்பன போன்ற பல்வேறு வீடியோக்களும் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வலம் வருகின்றன. அந்த வகையில் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட ஒரு புகைப்படம் பெங்களூரு டிராபிக்கின் நிலை குறித்த விவாதத்தை எழுப்பியுள்ளது.
பெங்களூருவை சேர்ந்த ஆயுஷ் சிங் என்பவர் பிரைகேட் மெட்ரோபோலீஸ் பகுதியில் இருந்து கே ஆர் புரம் ரயில்வே நிலையத்திற்கு செல்வதற்காக கூகுள் மேப்பில் டைரக்ஷனில் தேடி உள்ளார். அவர் இருக்கும் இடத்திலிருந்து கே ஆர் புரம் செல்வதற்கு இடையிலான தொலைவு ஆறு கிலோமீட்டர் ஆகும். கூகுள் மேப்பில் வாகனத்தில் சென்றால் 44 நிமிடங்கள் ஆகும். அதுவே ஒருவர் நடந்து சென்றால் 42 நிமிடங்களிலேயே சென்றுவிடலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனை அவர் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டு, பெங்களூருவில் மட்டும் தான் இது போன்ற விஷயங்கள் எல்லாம் நடக்கும் என கூறியுள்ளார். அவரது இந்த பதிவு பல லட்சம் பார்வைகளை பெற்றுள்ளது. பலரும் பெங்களூரு டிராபிக்கில் தங்கள் நேரம் எப்படி வீணாகிறது என்பதை பகிர்ந்து வருகின்றனர். சிலரோ பெங்களூரு மட்டுமல்ல இந்தியாவின் அனைத்து மெட்ரோ நகரங்களிலும் இதுதான் நிலைமை என பதிவிட்டு வருகின்றனர்.
ஒரு பயனாளர் மும்பை மற்றும் டெல்லியிலும் கூட இதே நிலைமைதான் என கூறியுள்ளார். ஒரு பயனாளர் பெங்களூருவை ஐடி தலைநகரம், ஏஐ தலைநகரம் என பல பெயர்களை கொண்டு அழைக்கிறோம். உண்மையில் பெங்களூரு போக்குவரத்து நெரிசலின் தலைநகரம் என்பது தான் பொருந்தும் என கூறியுள்ளார்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications