உலகின் மிகப்பெரிய டெக் சேவை நிறுவனமான கூகுள், இந்தியாவில் தனது வர்த்தகத்தையும், சேவைகளையும் அதிகரித்து வரும் வேளையில், அதிகப்படியான ஊழியர்களை பணியில் சேர்க்க திட்டமிட்டு உள்ளது.
குறிப்பாக அமெரிக்காவில் இருக்கும் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்யப்பட்ட நிலையில், இந்தியாவில் அலுவலகத்தை விரிவாக்கம் செய்யும் திட்டத்தைக் கூகுள் சில வாரங்களுக்கு முன்பு தெரிவித்தது. தற்போது இதை செயல்படுத்தியுள்ளது கூகுள்.

சுந்தர் பிச்சை தலைமையிலான கூகுள் பெங்களூருவில் 649,000 சதுர அடியில் வொயிட்பீல்ட் பகுதியில் இருக்கும் Alembic City-யில் புதிய அலுவலக வளாகத்தை வாடகைக்கு எடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் கூகுள் இந்தியாவில் தனது ஊழியர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டு உள்ளது உறுதியாகியுள்ளது.
கூகுள் இந்த அலுவலகத்தை மூன்று ஆண்டுகள் கால வாடகை ஒப்பந்தத்தில், சதுர அடிக்கு ரூ.62 என்ற வாடகையில் இந்த வளாகத்தைக் கூகுள் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் மாத வாடகை ரூ.4,02,38,000 அதாவது 4 கோடி ரூபாயாகும்.
அமெரிக்காவில் உள்ள தங்கள் அலுவலகங்களில் இருந்து சில முக்கிய பிரிவில் இருந்து பணியாளர்களைக் கொத்து கொத்தாக நீக்கிய சில வாரங்களில், இந்தியாவில் புதிய அலுவலக வளாகத்தை வாடகைக்கு எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், கூகுள் சில முக்கிய பணிகளை இந்தியாவுக்கு மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2022 ஆம் ஆண்டில், ஹைதராபாத்தில் உள்ள 600,000 சதுர அடி அலுவலக வளாகத்தின் வாடகை ஒப்பந்தத்தைக் கூகுள் கனெக்ட் சர்வீசஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் புதுப்பித்தது. அதை தொடர்ந்து பெங்களூருவில் உள்ள பாக்மனே ரியல் எஸ்டேட் நிறுவனத்திடம் இருந்து 1.3 மில்லியன் சதுர அடி அலுவலக வளாகத்தை வாடகைக்கு எடுக்கும் ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டு முதல், இந்தியாவில் கூகுளின் அலுவலக பரப்பளவு 3.5 மில்லியன் சதுர அடி அதிகரித்துள்ளது. தற்போது இந்தியாவின் 5 பெருநகரங்களில் 9.3 மில்லியன் சதுர அடி அளவிலான அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.
உற்பத்தி துறையிலும் நுழைந்த கூகுள் இந்தியாவில் தனது இருப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ஃபாக்ஸ்கான் (Foxconn) நிறுவனத்துடன் இணைந்து ஸ்மார்ட்ஃபோன்கள் தயாரிப்பதற்கும், ட்ரோன்கள் தயாரிப்பதற்குமான திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.
இதன் மூலம் கூகுள் சென்னையில் பிக்சல் (Pixel) ஸ்மார்ட்ஃபோன்களின் உற்பத்தி, பிக்சல் 8 மாடலுடன் இந்தியாவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற கூகுள் ஃபார் இந்தியா (Google for India) மாநாட்டில் பிக்சல் ஃபோன்களின் உற்பத்தியை இந்தியாவில் தொடங்குவதற்கான திட்டங்களைக் கூகுள் முதன்முதலில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications