இன்றெல்லாம் மக்கள் வங்கிகளுக்கு சென்று பணப்பரிவர்த்தனை செய்வது அரிதான விஷயமாக மாறிவிட்டது. காரணம் யுபிஐ பயன்படுத்தி பலரும் பரிவர்த்தனை செய்து வருகின்றனர். பணம் அனுப்புவதற்கும் சரி.. பணம் பெறுவதற்கும் சரி.. இவை மக்களின் வாழ்வில் முக்கிய அங்கமாகவே மாறிவிட்டது. அப்படி கூகுள் பே, போன் பே மற்றும் பேடிஎம் போன்ற அப்ளிகேஷன்களை பயன்படுத்தும் யுபிஐ பயனர்களுக்கு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் புதிய விதிமுறைகள் வரவுள்ளன.
யுபிஐ ஆப்-களுடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பர் குறிப்பிட்ட காலத்திற்கு செயல்பாட்டில் இல்லை என்றால் அவை வங்கி கணக்கிலிருந்து உடனடியாக அகற்றப்படும் என்று இந்திய தேசிய கொடுப்பனவுக் கழகம் (NPCI) தெரிவித்துள்ளது. அதாவது உங்கள் வங்கி கணக்கில் செயலற்ற மொபைல் நம்பர் இணைக்கப்பட்டிருந்தால்.. அது நீக்கப்படும். மேலும் UPI மூலம் பணம் செலுத்த முயற்சிக்கும்போது இது உங்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்தலாம்.

ஏன் இந்த முடிவு?: அதிகரித்து வரும் சைபர் குற்றங்களை கருத்தில் கொண்டு NPCI இந்த முடிவை எடுத்துள்ளது. செயலற்ற மொபைல் நம்பர் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டிருந்தால் அவை UPI அமைப்புகளுக்குள் ஏதேனும் தொழில்நுட்ப கோளாறுகளையும் ஏற்படுத்தக் கூடும். இதன் காரணமாகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் தொலைத்தொடர்பு வழங்குனர்கள் இந்த எண்களை வேறு ஒருவருக்கு மறு ஒதுக்கீடு செய்திருந்தால் அது மோசடிக்கான அபாயத்தை இன்னும் அதிகரிக்கலாம். குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும், அத்தகைய ஆபத்துகளில் இருந்து மக்களை பாதுகாக்கவும் அரசாங்கம் தொடர்ந்து பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அப்படி இருந்தும் இன்னும் மோசடி தொடர்பான செய்திகள் பல வெளியாகி கொண்டிருக்கின்றன. இதனால் பணப்பரிவர்த்தனை முதல் நெட் பேங்கிங் வரை அனைத்தையும் சீரமைக்கும் விதமாக தொடர்ந்து சில அறிவிப்புகள் வெளியாகிறது.
நீங்கள் என்ன செய்ய வேண்டும்?: நீங்கள் பயன்படுத்தும் மொபைல் நம்பர் உங்கள் வங்கி கணக்குடன் இணைந்திருக்கிறதா? என்பதை ஒன்றுக்கு இருமுறை சரிபார்த்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் நீங்கள் விரும்பிய பெருநரை நீங்கள் அனுப்பும் பணம் சரியாக சென்றடையும்.
அதுவே ஒரு செயலற்ற மொபைல் நம்பர் உங்கள் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டிருந்தால் அதுவே பிரச்சனையை ஏற்படுத்தும். சில நேரங்களில் இதே நம்பர் வேறு ஒருவருக்கும் உங்கள் தொலைதொடர்பு வழங்குனரால் ஒதுக்கப்படலாம். அப்படி இருந்தால் உங்களுக்கும் பிரச்சினை.. அவர்களுக்கும் பிரச்சினை. எனவே இதை எல்லாம் கருத்தில் கொண்டு செயலில் உள்ள மொபைல் நம்பரை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
உங்கள் வங்கி கணக்கில் இணைக்கப்பட்ட மொபைல் நம்பர் செயலில் இல்லை என்றாலோ அல்லது சிறிது காலமாக ரீசார்ஜ் செய்யவில்லை என்றாலோ அந்த நம்பர் உங்களுடைய பெயரில் தான் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் இதற்கு ஜியோ ஏர்டெல் அல்லது எந்த ஆபரேட்டரை பயன்படுத்தியிருக்கிறீர்களோ அவர்களுடைய கஸ்டமர் கேருக்கு தொடர்பு கொள்ளலாம்.
இந்த நடவடிக்கை ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது. எனவே எந்த ஒரு செயலற்ற எண்களும் வங்கிக் கணக்கில் இணைக்கப்படவில்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். முக்கியமாக இந்த நடவடிக்கை மோசடியை குறைக்கும் விதமாக எடுக்கப்பட்டுள்ளது. ஏனெனில் செயல்படாத வங்கி கணக்குகள், செயல்படாத மொபைல் நம்பர்களை பயன்படுத்தி தான் பெரும்பாலான மோசடி சம்பவங்கள் நடக்கிறது.
எனவே கூகுள் பே மற்றும் போன் பே போன்ற ஆப்களை பயன்படுத்துபவர்கள்.. உங்களுடைய மொபைல் நம்பர் செயலில் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். தேவையற்ற பிரச்சனையை தவிர்ப்பதற்கு ஒரு முறை சரி பார்த்துக் கொள்வது சிறந்தது தானே!


Click it and Unblock the Notifications