உலகம் முழுவதுமே செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இதனால் பெரிய பெரிய டெக் நிறுவனங்கள் எல்லாம் ஏஐ நிபுணர்கள் மற்றும் டேட்டா சயின்டிஸ்ட் நிபுணர்களை தேடித்தேடி பணிக்கு அமர்த்துகின்றன.
மெட்டா நிறுவனம் சாட் ஜிபிடி, கூகுள் உள்ளிட்ட நிறுவனங்களில் இருந்து நிபுணர்களை பல கோடி சம்பளத்திற்கு வேலைவாய்ப்பு தருவதாக கூறி வலைவீசி பார்த்தது செய்திகளில் முக்கிய இடம் பிடித்தது. ஏனெனில் ஏஐ போட்டி அந்த அளவுக்கு அதிகரித்துள்ளது. எலான் மஸ்கின் எக்ஸ் ஏஐ நிறுவனமும் இதேபோல ஓபன் ஏஐ உள்ளிட்ட நிறுவனங்களில் இருக்கும் நிபுணர்களை பல ஆயிரம் கோடி சம்பளம் தருவதாக கூறி வேலைக்கு அழைப்பு விடுத்தது.

பெரிய டெக் நிறுவனங்கள் எல்லாம் இப்படி திறன்மிகு நபர்களை பணிக்கு அமர்த்துவதில் கவனமாக இருக்கக் கூடிய சூழலில் கூகுள் நிறுவனம் செய்த ஒரு செயல் சமூக வலைத்தளங்களில் பலரது கிண்டலுக்கும் ஆளாகி இருக்கிறது. கூகுள் நிறுவனம் வேறு நிறுவனங்களின் ஊழியர்களை பணிக்கு வருமாரு அழைப்பு விடுத்து வந்த நிலையில் ஒரு படி மேலே சென்று தன் சொந்த ஊழியரையே கூகுளுக்கு வேலைக்கு வந்துவிடுங்கள் என மின்னஞ்சல் அனுப்பி இருக்கிறது.
இந்தியாவில் கூகுள் நிறுவனத்தில் பணிபுரிந்து வரக்கூடியவர் ராஜ் தாப்ரே. இவர் பல ஆண்டுகளாக கூகுள் இந்தியா நிறுவனத்தில் மூத்த டேட்டா சயின்டிஸ்ட் அதிகாரியாக வேலை செய்து வருபவர். இந்த சூழலில் கூகுள் நிறுவனத்தின் ஹெச்ஆர் குழு இவருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியதாம். அதில் நீங்கள் திறமை மிகுந்த ஊழியராக இருக்கிறீர்கள் கூகுளில் உங்களுக்கு பிரகாசமான வாய்ப்பு உண்டு நீங்கள் ஏன் கூகுளில் வேலைக்கு சேர கூடாது என அதில் இருந்ததாம்.
இதனால் அதிர்ச்சி அடைந்த தாப்ரே நான் ஏற்கனவே கூகுளில் தான் வேலை செய்து கொண்டிருக்கிறேன் இவர்கள் என்ன எனக்கே மெயில் அனுப்புகிறார்கள் என குழப்பமடைந்தாராம். இதனை அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட பலரும் கூகுளை கிண்டல் செய்து வருகின்றனர். சொந்த ஊழியர்கள் யாருனு கூட கூகுளுக்கு தெரியாது என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதற்கிடையே, தன்னுடைய எக்ஸ் பதிவை நீக்கி இருக்கும் தாப்ரே இது என்னுடைய தவறு தான். எனக்கு லிங்குடினில் பக்கம் இல்லை, என்னுடைய வெப்சைடையும் அப்டேட்டாக வைக்கவில்லை . கூகுள் ஏஐ மூலம் தான் ஊழியர்களை பணிக்கு அமர்த்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது, எனவே ஏஐ கருவியால் வந்த பிழை தான் இது என கூறியுள்ளார்.
பல்வேறு நிறுவனங்களும் திறன் மிகு ஊழியர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு வேலைவாய்ப்பு அழைப்புக்கான மின்னஞ்சல் அனுப்பும் பொறுப்பை ஏஐ கருவிகளிடம் ஒப்படைத்துவிட்டன. இது தான் ராஜ் தாப்ரே விவகாரத்தில் ஏற்பட்ட பிழைக்கு காரணம்.


Click it and Unblock the Notifications