உலகின் முன்னணி டெக் சேவை நிறுவனமான கூகுள் நிறுவனம் தங்களுடைய செயற்கை நுண்ணறிவு பிரிவுக்கான டேட்டா மையங்களை தாய்லாந்தில் நிறுவுவதற்கு முடிவு செய்துள்ளது. இதற்காக கூகுள் நிறுவனம் தாய்லாந்தில் 1 பில்லியன் டாலர்களை முதலீடாக செய்ய இருக்கிறது.
கூகுள் நிறுவனம் தங்களுடைய செயற்கை நுண்ணறிவு திறன் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கான பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. இதற்காக தென்கிழக்கு ஆசியாவில் செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்புகள் மற்றும் டேட்டா மையங்களை அமைப்பதற்கு கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

எனவே அவற்றை தாய்லாந்தில் அமைப்பது என கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த முதலீட்டின் மூலம் தாய்லாந்தில் 2029ஆம் ஆண்டுக்குள் ஆண்டுதோறும் 14 ஆயிரம் வேலை வாய்ப்புகள் புதிதாக உருவாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
அது மட்டும் இன்றி தாய்லாந்தின் பொருளாதாரமும் 4 பில்லியன் டாலர்கள் வரை வளரும் என சொல்லப்படுகிறது. பாங்காக் மற்றும் சோம்புரி ஆகிய இடங்களில் கூகுள் நிறுவனம் தன்னுடைய டேட்டா மையங்களை அமைக்க இருக்கிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் இந்த டேட்டா மையங்கள் நிறுவப்படும் என கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு சுட்டிக்காட்டுகிறது. இந்த அறிவிப்பினை கூகுள் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் தாய்லாந்தின் பிரதமர் சினாவாத்ரா ஆகியோர் இணைந்து வெளியிட்டனர்.
தாய்லாந்து அரசு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தான் தற்போது கூகுள் நிறுவனம் இங்கே கணிசமான தொகையை முதலீடு செய்ய முன்வந்துள்ளது. தற்போது பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் தாய் லாந்தினை நோக்கி படையெடுத்து வருகின்றன.
குறிப்பாக ஆப்பிள், மைக்ரோசாப்ட், என்விடியா மற்றும் அமேசான் ஆகிய நிறுவனங்கள் தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளில் தங்களுடைய செயற்கை நுண்ணறிவு டேட்டா மையங்களை நிறுவுவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றன.
ஏற்கனவே கூகுள் நிறுவனம் மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் பல மில்லியன் டாலர்களை முதலீடு செய்ய இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. குறிப்பாக கிளவுட் மற்றும் செயற்கை நுண்ணறிவு பிரிவுகளில் இந்த முதலீடு இருக்கும் என அறிவித்திருந்தது.
அமேசான் நிறுவனம் கடந்த மே மாதத்தில் தான் சிங்கப்பூரில் 9 மில்லியன் டாலர்களை முதலீடு செய்வதாக அறிவித்தது. மைக்ரோசாப்ட் நிறுவனம் கூடிய விரைவில் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தங்களுடைய டேட்டா மையங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு கட்டமைப்புகளை நிறுவ இருப்பதாக தெரிவித்துள்ளது.
Written by: Devika


Click it and Unblock the Notifications