கூகுள் நிறுவனம் இந்தியாவில் ஹைதராபாத் மற்றும் பெங்களூரு அலுவலகங்களில் ஊழியர் பணி நீக்க நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
கூகுள் நிறுவனம் அண்மைக்காலமாகவே சர்வதேச அளவில் ஊழியர்கள் பணிநீக்க நடவடிக்கையை மேற்கொண்டு இருக்கிறது. இந்த முறை இந்தியாவில் செயல்படும் ஊழியர்கள் மீது கை வைக்க திட்டமிட்டு இருப்பதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியாவில் பெங்களூரு மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் செயல்படும் அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் இந்த பணி நீக்க நடவடிக்கையின் மூலம் பாதிக்கப்பட இருக்கின்றனர். மார்க்கெட்டிங், சேல்ஸ் உள்ளிட்ட பிரிவுகளை சேர்ந்த ஊழியர்கள் பணி நீக்க நடவடிக்கையில் பாதிக்கப்பட இருக்கின்றனர்.

கூகுள் நிறுவனம் இந்தியாவில் பணி நீக்க நடவடிக்கை எடுக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் வெளியிடவில்லை. ஆனால் பிசினஸ் ஸ்டாண்டர்ட் வெளியிட்டுள்ள செய்தியில் அடுத்த வாரத்திலேயே கூகுள் நிறுவனம் இந்தியாவில் பணி நீக்க அறிவிப்புகளை வெளியிடும் என குறிப்பிடுகிறது. கூகுள் நிறுவனம் தங்களுடைய கூகுள் பிளாட்பார்ம் மற்றும் டிவைசஸ் பிரிவை மறு கட்டமைப்பு செய்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக ஊழியர்கள் பணி நீக்க நடவடிக்கையை சர்வதேச அளவில் மேற்கொண்டு வருகிறது. ஆன்ட்ராய்டு ,பிக்சல் ஸ்மார்ட் ஃபோன்கள் மற்றும் குரோம் ப்ரவுசர் ஆகிய பிரிவுகளில் பணியாற்றும் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். மேலும் பெங்களூரு மற்றும் ஹைதராபாத் நகரங்களில் செயல்படும் கூகுள் அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்களின் பதவிகளும் மாற்றி அமைக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாக இருக்கின்றன. அதாவது அதிக வருமானம் ஈட்டக்கூடிய ப்ராஜெக்ட்களை நோக்கி இந்த ஊழியர்கள் பணி மாற்றம் செய்யப்படுவார்கள் என சொல்லப்படுகிறது.
கடந்த ஆண்டு கூகுள் நிறுவனம் தங்களுடைய பிளாட்பார்ம் மற்றும் டிவைசஸ் பிரிவினை ஒரே பிரிவாக ஒருங்கிணைத்தது. இதில் பணியாற்றி வந்த ஊழியர்கள் தாங்களாகவே வேலையை விட்டு செல்வதற்கான புதிய திட்டங்களையும் அறிவித்தது. ஜெனரேட்டிவ் ஏஐ தொழில்நுட்பம் வேகமாக வளர்ச்சி அடைந்து வருவதால் பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் தங்களுடைய பெரும்பாலான பணிகளுக்கு ஜெனரேட்டிவ் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்திக்கொண்டு அந்த வேலையில் இருந்த ஊழியர்களை பணியில் இருந்து நீக்கம் செய்து வருகின்றன.
2025 ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து தற்போது வரை உலக அளவில் 28,000 தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் வேலையை இழந்துள்ளனர், மைக்ரோசாப்ட் , மெடா, கூகுள், அமேசான் உள்ளிட்ட 108 நிறுவனங்கள் ஊழியர்கள் பணி நீக்க நடவடிக்கையை எடுத்துள்ளன. 2023 ஆம் ஆண்டிலேயே கூகுள் நிறுவனம் உலக அளவில் 12 ஆயிரம் ஊழியர்களை பணியில் இருந்து நீக்கம் செய்தது அதில் இந்தியாவை சேர்ந்த சில ஊழியர்களும் பணி நீக்கம் பெற்றனர்.


Click it and Unblock the Notifications