இந்தியாவில் பிக்சல் ஸ்மார்ட்போன்களை உள்ளூர் உற்பத்தி செய்யும் திட்டத்தைக் கூகுள் அறிவித்துள்ளது. இதன் மூலம், பிரீமியம் பிரிவில் உள்ள தனது ஸ்மார்ட்போன்களை இந்தியாவிலேயே தயாரித்து, இந்திய மக்களுக்கு விற்பனை செய்தது போக வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய உள்ளது.
சுந்தர் பிச்சை தலைமையிலான கூகுள் நிறுவனம் மேக் இன் இந்தியா" திட்டத்தை மிகப்பெரிய அளவில் பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்துள்ளது.

கடந்த அக்டோபர் 2023 இல், முதன்முதலாகக் கூகுள், பிக்சல் 8 மற்றும் பிக்சல் 8 ப்ரோ ஆகிய ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் உற்பத்தியைத் தொடங்கும் எனக் கூறியது. மேலும், இந்திய மற்றும் வெளிநாட்டு உற்பத்தியாளர்களுடன் இணைந்து உற்பத்தி செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தெரிவித்தது.
இதன் வாயிலாக, 2024 ஆம் ஆண்டில் முதல் பிக்சல் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் கிடைக்க இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது மட்டும் அல்லாமல் இந்திய கல்வித் துறையில் இருக்கும் டிமாண்டை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற மாபெரும் இலக்குடன் களமிறங்கியது கூகுள்.
இந்திய மாணவர்களுக்குத் தேவையான மலிவு விலை லேப்டாப்களை வழங்கும் நோக்கில், கடந்த ஆண்டு சென்னையில் உள்ள ஃப்ளெக்ஸ் (Flex) நிறுவனத்துடன் இணைந்து குரோம்புக் (Chromebook) தயாரிப்பில் ஈடுபட்டுள்ள HP நிறுவனத்துடன் கூகுள் கூட்டணி வைத்தது. இதன் தொடர்ச்சியாக தற்போது ஸ்மார்ட்போன் தயாரிப்பில் தீவிரமாக இறங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் பிக்சல் ஃபோன்களை தயாரிப்பதற்காக, Foxconn நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என தகவல் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கை மூலம், இந்தியாவில் பிக்சல் ஸ்மார்ட்போன் வர்த்தகத்தை விரிவுபடுத்த உள்ளது.
இதேவேளையில் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள வணிக நிறுவனங்களுக்கு எடை குறைவான, தானியங்கி டிரோன் டெலிவரி சேவையை வழங்கும் Wing LLC என்ற கூகுளின் துணை நிறுவனத்தின் மூலம் டிரோன்களையும் தமிழ்நாட்டில் தயாரிக்கத் கூகுள் திட்டமிட்டுள்ளது. Wing LLC என்பது ஆல்பபெட்-ன் கிளை நிறுவனமாகும், இது டிரோன் சேவைகளை வழங்கி வருகிறது.
மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உயர்தர ஸ்மார்ட்போன் உற்பத்திக்கு தமிழ்நாடு சிறந்த தேர்வாக இருக்கும் என்பதையும் இந்த அறிவிப்பு உறுதிப்படுத்துகிறது.
ஏற்கனவே ஆப்பிள் நிறுவனத்தின் உற்பத்தி மையமாக டாடா, பாக்ஸ்கான் (Foxconn), பெகாட்ரன் (Pegatron) போன்ற நிறுவனங்கள் தமிழ்நாட்டில் இயங்கி வருகின்றன. இதன் மூலம், உயர்தர எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தியில் தமிழ்நாடு முன்னோடியாக விளங்குகிறது.
தேசிய அளவில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கு, அதாவது $9.56 பில்லியன் மதிப்பிலான எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
கூகுள் நிறுவனத்தின் இந்த முதலீடு, தமிழ்நாட்டை உயர்தர ஸ்மார்ட்போன் உற்பத்தி மையமாக மாற்றுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும். இதன் மூலம், தமிழ்நாட்டில் வேலைவாய்ப்புகள் பெருகுவதுடன், தொழில்நுட்ப வளர்ச்சியும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications