டெல்லி: வெங்காய ஏற்றுமதிக்கு அரசு விதித்திருந்த தடையை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதன் மூலம் இந்தியாவில் விளையும் அனைத்து வகையான வெங்காயத்தினையும், ஜனவரி 1 முதல் ஏற்றுமதி செய்து கொள்ள முடியும்.
முன்னதாக கடந்த செப்டம்பர் 15ம் தேதி வெங்காய விலையை குறைக்கும் விதமாக, ஏற்றுமதிக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இப்போது அந்த தடையை நீக்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.
விளைச்சல் பாதிப்பு
வெங்காயம் அறுவடை சமயத்தில் அதிகப்படியான பருவமழை காரணமாக, வெங்காய விளைச்சல் பெரிதும் பாதிக்கப்பட்டது. சொல்லப்போனால் வழக்கமான அறுவடையில் குறைந்தபட்சம் 10% குறைந்ததாக தரவுகள் கூறுகின்றன. இதே காலகட்டத்தில் விநியோக சங்கிலியும் பாதிக்கபட்ட நிலையில், வெங்காயத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதன் காரணமாக வெங்காயம் விலை மக்களை பெரும் பாதிப்புக்குள்ளாக்கியது.
இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்வு
சொல்லப்போனால் ஒரு கட்டத்தில் வெங்காயம் விலையானது 100 ரூபாய்க்கும் மேலாக சென்றது. இதனால் கொரோனா காலகட்டத்தில் மக்கள் பெரும் கவலையடைந்தனர். ஆக அந்த சமயத்தில் தான் ஏற்றுமதி தடை விதிக்கப்பட்டது.
இம்மாதத் தொடக்கத்தில் வெங்காய இறக்குமதிக்கான விதிமுறைகளை மத்திய அரசு தளர்த்தியிருந்தது. ஜனவரி 31 வரையில் வெங்காய இறக்குமதியில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், உள்நாட்டில் வெங்காய விநியோகத்தைச் சீராக்கி, விலையைக் கட்டுக்குள் வைத்திருக்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியது.
வெங்காயம் விலை குறைந்தது
இதன் பலனாக தற்போது வெங்காய விலை இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ள நிலையில், இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலையில் சென்னையில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை சுமார் கிலோ 40 ரூபாயாக உள்ளது.
தற்போது கையிருப்பு, இறக்குமதி காரணமாக இனி வெங்காயத்தின் விலை இனி சீராக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்றுமதி எவ்வளவு?
அதிகாரப்பூர்வ வரத்தக தரவுகளின் படி, இந்தியா கடந்த 2019 - 20ம் ஆண்டில் 328 மில்லியன் டாலர் மதிப்புடைய புதிய வெங்காயத்தினையும், இதே 112 மில்லியன் டாலர் மதிப்புடைய உலர் வெங்காயத்தினையும் ஏற்றுமதி செய்தது. கடந்த ஏப்ரல் - ஜூலை மாதத்திற்கு இடையேயான காலகட்டத்தில் மட்டும் அண்டை நாடான பங்களாதேஷீக்கு 157.7% வெங்காயம் ஏற்றுமதி அதிகரித்தது.


Click it and Unblock the Notifications