இந்திய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் கோடிக்கணக்கான பயணிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இனி சுங்கச்சாவடிகளில் அடிக்கடி பணம் செலுத்துவதும், காத்திருப்பதற்கும் ஒரு எண்ட் கார்ட் கிடைத்துள்ளது. அதாவது, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி (Nitin Gadkari), ஃபாஸ்டேக் அடிப்படையிலான ஆண்டு பாஸ் (FASTag-based Annual Pass) ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார். இது நெடுஞ்சாலைப் பயணங்களை மேலும் எளிமையாகவும், செலவு குறைந்ததாகவும் மாற்றும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஆண்டு பாஸின் முக்கிய அம்சங்கள்: இந்த புதிய ஃபாஸ்டேக் ஆண்டு பாஸ் ரூ.3,000 என்ற விலையில் கிடைக்கும். இது ஆகஸ்ட் 15, 2025 முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாஸ், தனியார் பயன்பாட்டு வாகனங்களான கார்கள், ஜீப்கள் மற்றும் வேன்களுக்கு மட்டுமே பொருந்தும்.

இதன் முக்கிய அம்சங்கள் -செல்லுபடியாகும் காலம்: ஒரு வருடம் அல்லது 200 பயணங்கள், இவற்றில் எது முதலில் வருகிறதோ அதுவரை இந்தப் பாஸ் செல்லுபடியாகும்.
பயண வரையறை: இந்தப் பாஸ் மூலம் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் தேசிய விரைவுச் சாலைகளில் (National Highways and National Expressways) உள்ள சுங்கச்சாவடிகளைக் கடக்கும் 200 பயணங்கள் வரை கட்டணமில்லாமல் பயணிக்கலாம்.
பெரிய சேமிப்பு: இந்த ஆண்டு பாஸ் மூலம், அடிக்கடி நெடுஞ்சாலைகளில் பயணிப்பவர்கள் கணிசமான தொகையைச் சேமிக்க முடியும். உதாரணமாக, ஒரு சுங்கச்சாவடிக்கு சராசரியாக ரூ.50 செலுத்துபவர், 200 பயணங்களுக்கு ரூ.10,000 செலவிடுவார். ஆனால், இந்த ஆண்டு பாஸ் மூலம் வெறும் ரூ.3,000 செலுத்தி, ரூ.7,000 வரை சேமிக்க முடியும். ஒரு பயணத்திற்கான சராசரி செலவு வெறும் ரூ.15 ஆகக் குறையும்.
60 கி.மீ. சுங்கச்சாவடி பிரச்சனைக்குத் தீர்வு: நீண்ட நாட்களாகப் பொதுமக்கள் மத்தியில் இருந்த 60 கி.மீ. சுற்றளவில் அமைந்துள்ள சுங்கச்சாவடிகளில் ஏற்படும் கட்டணப் பிரச்சனைகளுக்கும் இந்தப் பாஸ் ஒரு தீர்வாக அமையும் என்று அமைச்சர் கட்கரி தெரிவித்துள்ளார். இது ஒரேயொரு மலிவு விலை பரிவர்த்தனை மூலம் சுங்கச்சாவடி கட்டணத்தைச் செலுத்துவதை எளிதாக்குகிறது.
எப்படிப் பெறுவது?: இந்த ஃபாஸ்டேக் ஆண்டு பாஸை ராஜ்மார்க் யாத்ரா மொபைல் செயலி (Rajmarg Yatra App) மூலமாகவும், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI) மற்றும் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் (MoRTH) அதிகாரப்பூர்வ வலைத்தளங்கள் மூலமாகவும் பெற்றுக்கொள்ளலாம். இந்தப் பாஸை செயல்படுத்துவதற்கும், புதுப்பிப்பதற்கும் பிரத்யேக இணைப்புகள் விரைவில் வெளியிடப்படும்.
ஏற்கனவே ஃபாஸ்டேக் வைத்திருப்பவர்கள், புதிய ஃபாஸ்டேக்கை வாங்கத் தேவையில்லை. தற்போதுள்ள ஃபாஸ்டேக்கிலேயே இந்த ஆண்டு பாஸை இணைத்துச் செயல்படுத்துவதற்கான வசதி வழங்கப்படும். வாகன உரிமையாளர்கள், தங்கள் வாகனத்தின் பதிவு எண் மற்றும் ஃபாஸ்டேக் ஐடியை உள்ளிட்டு, ஆன்லைனில் ரூ.3,000 செலுத்துவதன் மூலம் பாஸை ஆக்டிவேட் செய்ய முடியும். சரிபார்ப்பு முடிந்ததும், பொதுவாக 2 மணி நேரத்திற்குள் பாஸ் செயல்பட்டுவிடும்.
நன்மைகளும் எதிர்கால திட்டங்களும்: இந்த ஆண்டு பாஸ் மூலம் சுங்கச்சாவடிகளில் காத்திருக்கும் நேரம் குறைவதுடன், போக்குவரத்து நெரிசலும் கணிசமாகக் குறையும். மேலும், சுங்கச்சாவடிகளில் ஏற்படும் சர்ச்சைகளும் குறைக்கப்பட்டு, தனியார் வாகன உரிமையாளர்களுக்குச் சீரான மற்றும் விரைவான பயண அனுபவம் கிடைக்கும்.
இது சுங்கச்சாவடி கட்டண முறையை டிஜிட்டல் மயமாக்கும் மற்றும் நவீனமயமாக்கும் ஒரு பெரிய முயற்சியின் முதல் படியாகும் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எதிர்காலத்தில், சுங்கச்சாவடிகளில் இருக்கும் தடைகளை அகற்றி, செயற்கைக்கோள் கண்காணிப்பு அடிப்படையிலான கட்டண முறையை அறிமுகப்படுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டு பாஸ் கட்டாயமில்லை. ஏற்கனவே இருக்கும் ஃபாஸ்டேக் அமைப்பு தொடர்ந்து செயல்படும். ஆண்டு பாஸை விரும்பாதவர்கள் வழக்கமான ஃபாஸ்டேக் முறையிலேயே பயணிக்கலாம்.


Click it and Unblock the Notifications