நம் ஊர்களில் நீயெல்லாம் கழுதை மேய்க்க தான் லாயக்கு என கூறி திட்டுவது உண்டு. ஆனால் இப்போது கழுதை மேய்ப்பது தான் சிறந்த தொழில் தெரியுமா அதுவும் மத்திய அரசே இதற்கு மானியமும் தருகிறது. எனவே கழுதை மேய்ப்பதை இனி சாதாரண விஷயமாக யாரும் கருதாதீர்கள்.
தேசிய கால்நடை வளர்ப்பு திட்டத்தின் கீழ் மத்திய அரசு நாட்டு விலங்குகளை வளர்ப்பதற்காக மானியம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. மத்திய அரசு தேசிய கால்நடை வளர்ப்பு திட்டத்தின் கீழ் கால்நடை தொழில்களை தொடங்க நிதி உதவி வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. இதன்படி நாட்டு விலங்களை வளர்க்கும் ஆர்வமுள்ளவர்கள் இதில் இணைந்து நிதி உதவி பெற முடியும்.

நாட்டு இனத்தை சேர்ந்த கழுதைகள், குதிரைகள், ஒட்டகங்கள் போன்ற விலங்குகளை வளர்த்து பண்ணைகளை அமைக்கும் நபர்கள், விவசாய குழுக்கள், சுய உதவிக் குழுவினர் இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்து மானியம் பெறலாம். அதிகபட்சமாக 50 லட்சம் ரூபாய் வரை மானியம் கிடைக்கும். எனவே சுயமாக தொழில் தொடங்க வேண்டும் குறிப்பாக கால்நடை வளர்ப்புகளில் ஆர்வம் இருப்பவர்கள் இதற்கு விண்ணப்பம் செய்ய முடியும்.
இந்தியாவில் கழுதைகளின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வரும் நிலையில் அதனை தடுக்கும் நோக்கில் மத்திய அரசு இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. 2019-ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கால்நடை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் சுமார் 1.23 லட்சம் கழுதைகள் மட்டுமே இருந்தன. இது 2012-ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் சுமார் 60 சதவீதம் குறைவு ஆகும்.
எனவே கழுதை பண்ணை அமைக்கும் ஆர்வம் உள்ளவர்கள் அதற்கான மொத்த திட்ட செலவில் 50% ஐ மானியமாக பெறலாம். இதில் அதிகபட்சம் 50 லட்சம் வரை மானிய தொகையாக கிடைக்கும். உதாரணமாக கழுதை பண்ணை அமைக்க குறைந்தது 50 நாட்டு இனத்தை சேர்ந்த பெண் கழுதைகள் மற்றும் 5 ஆண் கழுதைகள் இருக்க வேண்டும்.
வங்கிகளிடம் இத்திட்டத்திற்கு ஒப்புதல் பெற்றுவிட்டால் மானியம் இரண்டு தவணைகளாக வழங்கப்படும். வங்கி கடனுக்கு ஒப்புதல் வழங்கியவுடன் முதல் தவணையும், பண்ணை அமைக்கும் பணி முடிந்து, அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகு இரண்டாவது தவணையும் வழங்கப்படும். உள்நாட்டு நாட்டுப்புற கால்நடை வகைகளைப் பாதுகாக்கும் முயற்சியாக, உள்நாட்டு இனங்களுக்கு மட்டுமே இந்தத் திட்டம் பொருந்தும்.
தரிசாக நிலம் இருக்கிறது அதில் கால்நடை வளர்ப்பில் ஈடுபடலாம் என எண்ணுபவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம். கழுதை பால் உள்ளிட்டவற்றை ஆன்லைனில் விற்பனை செய்து பல ஆயிரம் வருமானம் பார்க்க முடியும். எனவே இளைஞர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.


Click it and Unblock the Notifications