டெல்லி: மத்திய அரசு நாடு முழுவதும் பயன்பாட்டில் இருக்கும் பழைய சிம் கார்டுகளை மாற்ற திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏனெனில் பயன்பாட்டில் இருக்கும் சில சிம்கார்டுகளில் உள்ள சிப்செட்டுகள் சீனாவில் தயாரிக்கப்பட்டவை என்றும் அவர் தனிநபர் விவரங்களை சேகரிப்பதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளதாம்.
தேசிய சைபர் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் (NCSC) மற்றும் உள்துறை அமைச்சகம் சேர்ந்து நடத்திய விசாரணையில் இந்த அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. எனவே, இது தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலை எழுப்புவதால் பழைய சிம்களை மாற்றுவது குறித்து அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

இந்தியாவில் 115 கோடி மொபைல் பயனர்கள் உள்ளனர். இவர்களில் குறிப்பிட சில சதவீத சிம் கார்டுகளில் சீன சிப்செட்டுகள் இருந்தால் கூட , அது தரவு பாதுகாப்புக்கு பெரிய பிரச்சினையை ஏற்படுத்தலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஏற்கனவே அரசு தேசிய பாதுகாப்பு காரணங்களால் சீன நிறுவனங்களான ஹூவாய் மற்றும் ZTE-யின் போன்களை தடை செய்திருந்தது. இந்நிலையில், சில சிம் கார்டு விற்பனையாளர்கள் முறைகேடாக சீன சிப்செட்டுகளை பயன்படுத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
NCSC அமைப்பு இது தொடர்பாக ஜியோ, ஏர்டெல், வோடபோன்-ஐடியா போன்ற பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களின் நிர்வாகிகளையும், தொலைத்தொடர்பு அமைச்சக அதிகாரிகளையும் சந்தித்து பேசியுள்ளது. இந்த சந்திப்புகளில், சிம் கார்டுகள் உள்ளிட்ட தொலைத்தொடர்பு பொருட்களை வாங்கும் முறையில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை சரிசெய்வது பற்றியும், பழைய சிம்களை மாற்றுவதற்கு பற்றியும் ஆலோசனை நடத்தப்பட்டதாம்.
தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சிம் கார்டுகளை "நம்பகமான விற்பனையாளர்களிடம்" (trusted vendors) என சான்றளிக்கப்பட்டவர்களிடம் இருந்து வாங்குகின்றன. இந்த விற்பனையாளர்கள், வியட்நாம், தைவான் போன்ற அனுமதிக்கப்பட்ட இடங்களில் இருந்து சிப்செட்டுகளை வாங்கி, இந்தியாவில் சிம் கார்டுகளை தயாரித்து நிறுவனங்களுக்கு வழங்குகின்றன. ஆனால், சில விற்பனையாளர்கள் "நம்பகமான மூலம்" என்ற சான்றிதழை தவறாக பயன்படுத்தி, சீனாவில் இருந்து சிப்செட்டுகளை வாங்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
முதலில் நம்பகமான இடங்களில் இருந்து வாங்குவதாக சொல்லி சான்றிதழ் பெற்றவர்கள், பின்னர் சீன சிப்செட்டுகளை உபயோகித்துள்ளனர். இந்நிலையில் தான் அரசு ப்ழைய சிம் கார்டுகளை மாற்ற திட்டமிட்டுள்ளது. ஆனால் இதை செயல்படுத்துவதற்கு தொழில்நுட்ப மற்றும் சட்ட சவால்கள் உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
இருந்தாலும் இது மக்களின் தனிப்பட்ட தகவல்களுக்கும் தேச பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருப்பதால் அரசு இந்த நடவடிக்கையை தீவிரமாக கையில் எடுக்கும் என்றே சொல்லப்படுகிறது. எனவே தொலை தொடர்பு நிறுவனங்கள் பழைய சிம் கார்டுகளை மாற்றுவதற்கான திட்டங்களை தயாரிக்கும் படி அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளதாம்.
இதனிடையே அரசு நம்பகமான மூலத்தில் இருந்து மட்டுமே சிப்செட்டுகளை வாங்க வேண்டும் இல்லையெனில் கடும் நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்ற எச்சரிக்கையும் விடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications