நம் நாட்டில் நகரங்கள் அதிவேகமாக வளர்ச்சி கண்டு வருகின்றன. பெருநகரங்களில் என்னதான் பஸ், ரயில் போக்குவரத்து வசதிகள் இருந்தாலும் அது போதுமானதாக இருக்கிறதா என்றால் அது கேள்வி குறிதான். பெருகி வரும் வாகனங்கள் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சில சமயங்களில் சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இடத்துக்கு செல்ல ஒரு மணி நேரம் ஆகி விடுகிறது. இதனால் நகரங்களில், போக்குவரத்து நெரிசலை குறைக்க மெட்ரோ இணைப்பை அதிகரிக்க மத்திய அரசு விரும்புகிறது.
நம் நாட்டில் மெட்ரோ மற்றும் விரைவு ரயில் திட்டங்கள் பொதுவாக மத்திய மற்றும் மாநில அரசுகளின் கூட்டாண்மையில் செயல்படுத்தப்படுகிறது. நம் நாட்டில் தற்போது 11 மாநிலங்கள் மற்றும் 23 நகரங்களில் சுமார் 1,000 கிலோ மீட்டர் மெட்ரோ மற்றும் விரைவு ரயில் திட்டங்கள் பயன்பாட்டில் உள்ளன. மேலும், 985 கி.மீ. தொலைவிலான திட்டங்கள் கட்டுமானத்தில் உள்ளன.

2022ம் ஆண்டின் அதிகாரப்பூர்வ மதிப்பீடுகளின்படி, மெட்ரோ ரயில் திட்டங்களின் நீளத்தில் ஜப்பானை நம் நாடு முந்தியது. தற்போது, சர்வதேச அளவில், பயன்பாட்டில் உள்ள மெட்ரோ நெட்வொர்க் நீளத்தில் நம் நாடு 3வது இடத்தில் உள்ளது. உலகின் 2வது பெரிய மெட்ரோ ரயில் நெட்வொர்க் என்ற இலக்கை என்ற நோக்கிய பயணத்தில் நம் நாடு உள்ளது. 2024ம் ஆண்டின் பிற்பகுதியில், டெல்லி, பெங்களூரு, தானே மற்றும் புனேவில் உள்ள மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இந்நிலையில், மெட்ரோ ரயில் இணைப்பை ஊக்குவிக்கும் மற்றும் விரிவுப்படுத்தும் நோக்கில், எதிர்வரும் மத்திய பட்ஜெட்டில், மெட்ரோ ரயில் திட்டம் 5 ஆண்டு நிதி தொகுப்பை மத்திய அரசு அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2024-25ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், மாஸ் ரேபிட் டிரான்சிட் சிஸ்டம் மற்றும் மெட்ரோ திட்டங்களுக்கு மூலதன செலவாக ரூ.24,785.94 கோடி ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக பெயர் வெளியிட விரும்பாத அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், நகரங்கள் வளரும்போது நெரிசலைக் குறைக்க மெட்ரோ ரயில் இணைப்பை அதிகரிக்க மத்திய அரசு விரும்புகிறது. எனவே இந்த நோக்கத்துடன் ஒரு திட்டத்தை எதிர்வரும் பட்ஜெட்டில் வெளியிடக்கூடும். பட்ஜெட் தலையீடுகள் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் தற்போதுள்ள நெட்வொர்க்கை இரட்டிப்பாக்குவதே மத்திய அரசின் இலக்கு என்று அவர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications