சத்தீஸ்கர்: பொதுமக்களாகிய நாம் செலுத்தும் வரி பணம் தான் அரசின் முக்கியமான நிதி ஆதாரம். இந்த நிதியை கொண்டு தான் மத்திய மாநில அரசு பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்துகின்றன. ஆனால் இப்படி மக்களிடம் இருந்து பெறப்படும் வரி பணத்தில் ஊழல் நடைபெறுவதாக பல்வேறு மாநிலங்களிலும் சமூக ஆர்வலர்கள் புகார் கூறி வருகின்றனர். அப்படி ஒரு புகார் சத்தீஸ்கர் மாநிலத்தில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஒப்பந்தத்தில் முறைகேடு: மாநில அரசுகள் பட்டியலின மக்களுக்காகவும் பழங்குடியின மக்களுக்காகவும் துறைகளை நியமித்து நலத்திட்ட பணிகளை மேற்கொள்கின்றன. அப்படி சத்தீஸ்கர் மாநிலத்தில் பழங்குடியின மக்கள் நலனுக்காக செல்ல வேண்டிய பணத்தில் ஊழல் நடந்திருப்பதாக வெங்கடேஷ் அல்லா என்பவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டு இருக்கிறார் . அதில் அண்மையில் சத்தீஸ்கர் மாநில அரசு வெளியிட்ட ஒரு ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பதாக சாடியிருக்கிறார் .

பிளாஸ்டிக் தண்ணீர் ஜக் வாங்க ரூ.52 லட்சம்: வெங்கடேஷ் அல்லா வெளியிட்டிருக்கும் பதிவில் சத்தீஸ்கர் மாநில அரசை டேக் செய்து 160 பிளாஸ்டிக் தண்ணீர் ஜக் வாங்குவதற்கு 52 லட்சம் ரூபாயா என கேள்வி எழுப்பி இருக்கிறார். இந்த ஜக் என்ன தங்கத்தால் செய்யப்பட்டதா என வினவி இருக்கும் அவர் , ஒரு ஜக்கிற்கு 32,500 ரூபாய் என சத்தீஸ்கர் மாநில அரசு கணக்கு காட்டி இருக்கிறது என சுட்டிக்காட்டியுள்ளார். பொதுமக்களிடமிருந்து வரி என்ற பெயரில் வசூல் செய்யப்படக்கூடிய பணம் இப்படி தான் திருடப்படுகிறது என விமர்சித்துள்ளார்.
மக்கள் பணம் கொள்ளை: பழங்குடியின மக்களின் நலனுக்காக செலவு செய்ய வேண்டிய இந்த பணத்தை வெட்கமே இல்லாமல் திருடி இருக்கின்றனர் எனக் கூறியிருக்கிறார் . இப்படி ஒரு ஒப்பந்தத்திற்கு யார் அனுமதி தந்தது இந்த முறை கேட்டின் மூலம் யார் லாபம் பெற்றது என்ற கேள்வியையும் அவர் எழுப்பி இருக்கிறார். இத்துடன் அவர் ஒப்பந்தம் சம்பந்தப்பட்ட ஆவணத்தையும் இணைத்து இருக்கிறார். அதில் சத்தீஸ்கர் மாநிலத்தின் பட்டியலின மக்களுக்கான துறையால் , பழங்குடியின மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட ஒப்பந்தம் குறித்த விவரங்கள் இடம்பெற்றிருக்கின்றன. ஆயிரம் மில்லி அளவு கொண்ட 170 தண்ணீர் ஜக் 51,99,920 லட்சத்திற்கு வாங்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
சத்தீஸ்கர் அரசுக்கு கேள்வி: இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனத்தை நான் தேடி பார்த்தேன் அப்படி ஒரு நிறுவனமே தென்படவில்லை என அவர் பதிவு செய்திருக்கிறார். இவருடைய இந்த எக்ஸ் பதிவு ஆயிரக்கணக்கான மக்களின் பார்வையை பெற்றுள்ளது. நூற்றுக்கணக்கானவர்கள் இதில் கமண்ட் செய்துள்ளனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜக தலைமையிலான அரசு ஆட்சி நடத்தி வருகிறது. விஷ்ணு தியோ சாய் அந்த மாநிலத்தின் முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications