மத்திய அரசு யூனியன் பட்ஜெட்டுக்கான பணிகளை தொடங்கிவிட்டது. மத்திய நிதி அமைச்சகம் பல துறை அதிகாரிகள் உடனும், பல்வேறு நிபுணர்கள், தொழிலாளர் யூனியன்கள் , அமைப்புகளுடனும் பட்ஜெட்டிற்கு முந்தைய ஆலோசனை கூட்டத்தை தொடங்கியுள்ளது.
இந்த சூழலில் எதிர் வரக்கூடிய பட்ஜெட்டில் EPS -1995 திட்டத்தின் கீழ் ஓய்வூதியத்தை உயர்த்துவது தொடர்பான முக்கியமான அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது. இந்தியாவில் தற்போது EPS -1995 என்ற சமூக பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒரு நபர் தான் வேலைக்கு செல்ல கூடிய காலத்தில் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் வைக்கும் பங்களிப்பில் குறிப்பிட்ட தொகை ஓய்வூகாலத்திற்கான ஓய்வூதிய திட்டத்திற்கு சென்றுவிடும்.

இதன்படி ஊழியர்களின் பங்களிப்பு மற்றும் அரசின் ஆதரவோடு இந்த ஓய்வூதியம் என்பது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஓய்வூதியத் தொகை குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாயாக இருக்கிறது. இதனை 9 ஆயிரம் ரூபாய் என உயர்த்துவதற்கு அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது தற்போது கிடைக்கக்கூடிய குறைந்தபட்ச ஓய்வூதியத்தை விட இது கிட்டத்தட்ட 800 சதவீதம் அதிகம். இது 65 லட்சத்திற்கும் அதிகமான அரசு ஓய்வூதியதாரர்களுக்கு பெரிய பலனை அளிக்கும் என சொல்லப்படுகிறது.
EPS -1995 திட்டத்தின் கீழ் பலன் பெறக்கூடிய ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதிய தொகை உயர்த்த வேண்டும் என நீண்ட காலமாக அரசிடம் கோரிக்கை முன் வைக்கப்பட்டு வருகிறது. அண்மையில் நடந்த பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு யூனியன்கள் சார்பிலும் மத்திய நிதி அமைச்சகத்திடம் இதே கோரிக்கை வலியுறுத்தப்பட்டது . வாழ்க்கை செலவினங்கள் அதிகரித்து வருவதால் குறைந்தபட்ச ஓய்வூதிய தொகையும் உயர்த்த வேண்டும் என அதில் கேட்டுக் கொண்டனர்.
EPS -1995 திட்டம் நடைமுறைக்கு வந்தது முதலே 1000 ரூபாய் குறைந்தபட்சம் ஓய்வூதியம் என நிர்ணயம் செய்யப்பட்டது. அதன் பின்னர் அது மாற்றப்படவே இல்லை . ஆனால் அதன் பிறகு பல்வேறு பொருட்களின் விலைவாசிகள் பல மடங்கு உயர்ந்து விட்டன . எனவே குறைந்தபட்ச ஓய்வூதிய தொகையை 7,500 முதல் 9000 ரூபாய் வரை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது.
இந்த சூழலில் தான் மத்திய அரசு இந்த பட்ஜெட்டில் ஓய்வூதியம் தொடர்பான முக்கிய அறிவிப்பை வெளியிடும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அரசின் பட்ஜெட் ஒதுக்கீட்டை பொறுத்து தான் குறைந்தபட்ச ஓய்வூதிய தொகை எவ்வளவு உயரும் என்பது தீர்மானிக்கப்படும். அரசு ஒரு வேளை 9000 ரூபாயை வரை உயர்த்தினால் லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்களுக்கு பெரிய பலனை தரும்.


Click it and Unblock the Notifications