மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் 3 பெரிய பொதுத் துறை காப்பீட்டு நிறுவனங்களான ஓரியண்டல் இன்சூரன்ஸ், நேஷனல் இன்சூரன்ஸ் மற்றும் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் ஆகியவற்றை ஒன்றாக இணைப்பது பற்றி மத்திய நிதி அமைச்சகம் மீண்டும் தீவிரமாக ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிறுவனங்கள் தற்போது நிதி ரீதியாக சற்று ஆரோக்கியமாக மாறியிருப்பதால், ஒரே நிறுவனமாக இணைப்பதன் மூலம் அவற்றின் செயல்பாட்டுத் திறனை மேலும் அதிகரிக்கலாம் என்று மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
கடந்த சில வருடங்களாக இந்த 3 காப்பீட்டு நிறுவனங்களும் நிதி சிக்கலில் சிக்கித் தவித்து வந்தன. இதனால், மத்திய அரசு 2019-20 முதல் 2021-22 வரையிலான காலகட்டத்தில் சுமார் ரூ.17,450 கோடி பணத்தை முதலீடாக செலுத்தி, அவற்றின் நிதி சிக்கல்களை முடிவுக்கு கொண்டு வந்தது.

கடந்த 2018-19ஆம் ஆண்டு பட்ஜெட்டின்போதே, இந்த 3 நிறுவனங்களையும் ஒரே நிறுவனமாக இணைக்கும் திட்டம் இருந்தது. ஆனால், ஜூலை 2020இல் இந்த முடிவை அரசு கைவிட்டுவிட்டது. அதற்கு பதிலாக, நிறுவனங்களுக்கு பண உதவி செய்வதில் கவனம் செலுத்தி வந்தது.
இப்போது, நிறுவனங்களின் நிதி நிலைமை மேம்பட்டிருப்பதால், அவற்றின் செயல்பாட்டை இன்னும் சிறப்பாக மாற்றுவதற்காக, இந்த இணைப்பை குறித்து ஆரம்ப கட்ட ஆய்வை நிதி அமைச்சகம் தொடங்கியுள்ளதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
இணைப்புத் திட்டத்துடன் சேர்த்து, ஒரு பொதுத் துறை காப்பீட்டு நிறுவனத்தை தனியார்மயமாக்குவது குறித்தும் அரசு பரிசீலனை செய்து வருகிறது. இது தொடர்பாக பல வழிகளை அரசு பரிசீலித்தாலும், இன்னும் உறுதியான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.
கடந்த 2021-22ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டின்போது, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இரண்டு பொதுத் துறை வங்கிகள் மற்றும் ஒரு பொதுக் காப்பீட்டு நிறுவனத்தை தனியாருக்கு விற்கப்போவதாக அறிவித்தார். இதற்கு வழிவகுக்கும் வகையில், பொதுத் துறை காப்பீட்டு நிறுவனங்களில் மத்திய அரசு குறைந்தது 51% பங்குகளை வைத்திருக்க வேண்டும் என்ற விதியை நீக்கும் சட்டத் திருத்தம் 2021இல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இது, தனியார் முதலீடு மற்றும் பங்களிப்பு காப்பீட்டு துறைக்குள் அதிகமாக வர வழி வகுத்தது.
வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கும் திட்டம் : இந்தியாவில் காப்பீட்டு துறையின் தேவையை பூர்த்தி செய்யவும், புதிய நிறுவனங்கள் வருவதற்கு வழி வகுக்கவும், காப்பீட்டு துறையில் வெளிநாட்டு நேரடி முதலீட்டின் (FDI) உச்சவரம்பை தற்போதுள்ள 74% இல் இருந்து 100% ஆக உயர்த்த கோரும் மசோதாவை அரசு கொண்டுவர திட்டமிட்டுள்ளது. இந்த மசோதா வரும் டிசம்பர் 1 முதல் 19 வரை நடைபெறவுள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications