உலக அளவில் மிகப்பெரிய சமையல் எண்ணெய் விற்பனைக்கான சந்தையாக இந்தியா இருக்கிறது. இந்தியர்களின் பெரும்பாலான உணவுகளில் அதிகமாக எண்ணெய் பயன்பாடு என்பது இருக்கிறது. அந்த வகையில் இந்தியாவில் பல்வேறு நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு சன் பிளவர் ஆயில் , பாமாயில் , ரைஸ் பிரான் ஆயில் என பல்வேறு சமையல் எண்ணெய்களை விற்பனை செய்கின்றன.
சமையல் எண்ணெய் விற்பனையில் தான் நிறுவனங்கள் மிக நூதமான முறையில் ஒரு உத்தியை கையாண்டு அதிக லாபம் பார்க்கின்றன. பெரும்பாலான மக்கள் ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் எனக்கூறி ஒரு பாக்கெட்டை விலை கொடுத்து வாங்குகிறோம் ஆனால் உண்மையில் அது ஒரு லிட்டர் கொள்ளளவு கொண்டிருக்கிறதா என்பதை நம்மில் பெரும்பாலானவர்கள் பரிசோதனை செய்து பார்ப்பதில்லை. ஏனெனில் பல்வேறு நிறுவனங்களும் ஒரு லிட்டர் எண்ணெய் விற்பனை செய்வது கிடையாது.

பாக்கெட்டின் ஒரு ஓரத்தில் பார்த்தால் அது 900 கிராம், 850 கிராம் என்று தான் அளவு போடப்பட்டிருக்கும். ஆனால் பெரும்பாலான மக்கள் அந்த அளவை கவனிக்காமல் ஒரு லிட்டர் என நினைத்து வாங்கி பயன்படுத்துகிறோம். ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு அளவை வைத்து சமையல் எண்ணெய் விற்பனை செய்வதால் நுகர்வோர் பாதிக்கப்படுகின்றனர் என்பதை கருத்தில் கொண்டு மத்திய அரசு ஒரு நடவடிக்கையை எடுக்க தயாராகி வருகிறது.
இந்திய சந்தையில் சமையல் எண்ணெய் விற்பனையில் தரப்படுத்தப்பட்ட பாக்கெட் அளவுகளை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகளை மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது. அதாவது ஒரு பாக்கெட்டில் இவ்வளவு கொள்ளளவு தான் எண்ணெய் இருக்க வேண்டும் என்றால் அனைத்து நிறுவனங்களுமே அந்த அளவுக்கு தான் எண்ணெயை அடைத்து விற்பனை செய்ய வேண்டும் என்ற முறையில் ஒரு மாற்றத்தை கொண்டு வருவதற்கு மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
இந்தியாவில் எண்ணெய் விற்கும் நிறுவனங்கள் 650 கிராம், 700 கிராம், 110 கிராம், 150 , 870 கிராம், ஒரு லிட்டர் போன்ற அளவுகளில் ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு முறையில் பொட்டலம் இட்டு விற்பனை செய்வதால் வாடிக்கையாளர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுவதாக பல்வேறு பிரதிநிதிகளும் மத்திய நுகர்வோர் துறையிடம் சுட்டிக்காட்டினர். இதனால் பொதுமக்கள் விலைகளை ஒப்பிட்டு வாங்குவது கடினமானதாக இருக்கிறது என கூறியுள்ளனர்.
இதனை அடுத்து தான் மத்திய அரசு இனி சமையல் எண்ணெய்களை 200 மில்லி , 500 மில்லி, ஒரு லிட்டர் , இரண்டு லிட்டர், 3 லிட்டர் , 5, 15 லிட்டர் மற்றும் 20 லிட்டர் ஆகிய அளவு கொண்ட பாகெட்டுகளில் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என மாற்றம் கொண்டு வருவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது. விரைவில் இது அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications

