தமிழ்நாட்டில் புதிதாக பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசின் முதல் சட்டசபை கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கியுள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியில் நடக்காது ஒன்று முதலமைச்சர் விஜய் தலைமையிலான ஆட்சியில் இன்று நடந்தது.
வழக்கமாக ஒரு அரசு புதிதாக அமையும் போதும் ஆண்டின் தொடக்கத்தின் போதும் முதல் சட்டசபை தொடர் ஆளுநரின் உரையோடு தான் தொடங்கும். அதாவது அந்த ஆண்டில் மாநில நிர்வாகத்திற்கும் மக்கள் நலனிற்கும் என்னென்ன திட்டங்களை அரசு செயல்படுத்த போகிறது, இதுவரை செயல்படுத்திய திட்டங்கள் என்னென்ன என்பன உள்ளிட்ட அம்சங்கள் ஆளுநரின் உரையில் இடம்பெறும். இது நாடு முழுவதும் பின்பற்றப்படும் ஒரு மரபு. மத்தியில் கூட குடியரசு தலைவர் உரையுடன் தான் முதல் மக்களவை தொடர் தொடங்கும்.

ஆனால் தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளாக ஆளுநர் உரையே நிகழவில்லை. கடந்த திமுக ஆட்சியின்போது, ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி, 2022ஆம் ஆண்டு சட்டசபையின் முதல் கூட்டத்தில், தனது உரையை முழுமையாக படித்தார். அரசின் அறிவிப்புகள், திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். ஆனால், 2023ஆம் ஆண்டு சட்டசபை முதல் கூட்டத்தில் பேசிய கவர்னர் ஆர்.என்.ரவி, தனது உரையில் இருந்த மகளிர் முன்னேற்றம், மதச்சார்பின்மை, சுயமரியாதை, பெரியார், அம்பேத்கர், கருணாநிதி ஆகிய சொற்களை கூறாமல் தவிர்த்தார். இதனால் சர்ச்சை ஏற்பட்டது.
அப்போது எழுந்து பேசிய அப்போதைய முதலமைச்சர் ஸ்டாலின், அரசு கொடுத்த உரையில் இருப்பதுதான் அவைக் குறிப்பில் ஏற்றப்படும் என கூற, ஆளுநர் ஆர்.என்.ரவி அவையில் இருந்து வெளியேறினார்.இந்நிலையில் 2024 ஆம் ஆண்டு சட்டசபை முதல் கூட்டத்தில் பேச வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, தனது உரைக்கு முன்னால், தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் பாடப்பட்டது, தேசிய கீதம் பாடப்படவில்லை என்று கூறி, உரையை வாசிக்காமல் புறக்கணித்து சென்றார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் ஆளுநர் உரையை தமிழில் சபாநாயகர் அப்பாவு வாசித்து அவைக்குறிப்பில் ஏற்றப்பட்டது.
கடந்த ஆண்டு 2025ஆம் ஆண்டு சட்டசபையின் முதல் கூட்டத்தில் பேச வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, தேசிய கீதம் பாடப்படவில்லை என்ற காரணத்தை கூறி உரையை வாசிக்காமல் வெளியேறினார். இந்த ஆண்டு தொடங்கத்தில் நடைபெற்ற முதல் சட்டசபை கூட்டத்திலும், தேசிய கீதம் பாடப்படவில்லை என கூறி, மீண்டும் உரையை வாசிக்காமல் ஆர்.என்.ரவி வெளியேறினார்.

2023ஆம் ஆண்டு முதல் இந்த ஆண்டு வரை 4 முறை ஆளுநர் உரையை முழுமையாக வாசிக்கவில்லை. தற்போது, ஆர்.என்.ரவி மேற்கு வங்க மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், கேரள ஆளுநராக இருக்கும் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் , தமிழக பொறுப்பு கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் சட்டசபை கூட்டத்தில் ஆளுநர் அர்லேகர் தனது உரையை முழுமையாக வாசித்தார். இதன் மூலம் ஆளுநர் உரை வாசிப்பு என்ற மரபு 4 ஆண்டுகளுக்கு பின்பு எந்த சர்ச்சையும் இல்லாமல் முடிந்துள்ளது.
ஆளுநர் உரையில் மத்திய அரசுக்கு எதிரான சில அம்சங்கள் இடம்பெற்றிருந்த போதிலும் அர்லேகர் அதனை முழுமையாக வாசித்தார். மும்மொழி கொள்கை, மாநில கல்வி நிதி போன்ற பகுதிகள் இருந்தும் அவர் தவறாமல் படித்தார்.


Click it and Unblock the Notifications

