இந்தியா பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் பாதுகாப்பு உபகரணங்களை தயாரிக்கும் நிறுவனங்களுடன் மத்திய அரசு அடுத்த வாரம் முக்கிய ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
சிஎன்பிசி டிவி 18 வெளியிட்டுள்ள தகவலில் இது வெளியாகியுள்ளது. பாரத் ஃபோர்ஜ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவரும் மேலாண் இயக்குனருமான பாபா சாஹேப் நீல்கந்த் கல்யாணி இந்த தகவலை தெரிவித்து இருப்பதாக சிஎன்பிசி டிவி 18 வெளியிட்டுள்ள செய்தி குறிப்பிடுகிறது. இந்த தொலைகாட்சி சார்பாக பாரத் ஃபோர்ஜ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவரான பாபா சாஹேப் நீல்கந்த் கல்யாணிடம் " பாதுகாப்புத்துறை உபகரணங்கள் உற்பத்தியை அதிகரிக்க வேண்டுமென அரசு சார்பில் ஏதேனும் உத்தரவு வந்திருக்கிறதா"? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்துள்ள அவர் அடுத்த வாரம் டெல்லிக்கு வரும்படி அரசு சார்பில் எங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. எங்களுடைய குழுவினர் டெல்லிக்கு செல்ல இருக்கின்றனர். இதற்கு மேல் எதுவும் கூற முடியாது என தெரிவித்திருக்கிறார். இந்தியாவில் பாரத் ஃபோர்ஜ் நிறுவனத்தை தவிர இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ், பாரத் டைனமிக்ஸ் , பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்களும் பாதுகாப்புத் துறை சம்பந்தப்பட்ட உபகரணங்களை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டு இருக்கின்றன.
ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள தரவுகளின் படி பார்க்கும்போது கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் இந்தியா பாகிஸ்தான் இடையிலான இந்த போர் பதற்றம் அதிகாரத்தை அடுத்து பாதுகாப்பு துறை சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பங்குகள் கணிசமான அளவு உயர்ந்து வருகிறதாம். கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் பாதுகாப்புத்துறை சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் சந்தை மூலதனத்தில் கூடுதலாக 5 பில்லியன் டாலர்கள் வரை சேர்க்கப்பட்டிருப்பதாக அந்த தகவல் குறிப்பிடுகிறது.
இந்தியா டுடே வெளியிட்டுள்ள செய்தியில் வெள்ளிக்கிழமை அன்று பங்குச்சந்தையில் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக் லிமிடெட், பாரத் டைனமிக்ஸ் ,பாரத் எலக்ட்ரானிக்ஸ், பராஸ்ட் டிபன்ஸ் நிறுவனங்களின் பங்குகள் 2 முதல் 7 சதவீதம் முறை உயர்ந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு மே 9ஆம் தேதி 4,483.20 ரூபாய் என வர்த்தகமானது.
அதே போல பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 1,531.70 ரூபாய் என்றும் , பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 315.10 ரூபாய் என்றும், பராஸ் டிபென்ஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 1,434.10 ரூபாய் என்றும் வர்த்தகமானது. பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானிலும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலும் இருந்த பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.


Click it and Unblock the Notifications