டெல்லி: அண்டை நாடுகளிடமிருந்து பொருட்களை இறக்குமதி செய்வதை விட சீன நிறுவனங்களை இந்தியாவில் முதலீடு செய்து பொருட்களை உற்பத்தி செய்ய அனுமதிப்பதன் மூலம் இந்தியாவில் உற்பத்தி துறை வளர்ச்சி அடையும் என நிதி ஆயோக் உறுப்பினர் அரவிந்த் விர்மானி தெரிவித்துள்ளார். ஜூலை 22-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கையானது தாக்கல் செய்யப்பட்டது.
பொருளாதார ஆய்வறிக்கையில் உள்நாட்டில் உற்பத்தி துறையை மேம்படுத்த சீன நிறுவனங்கள் இந்தியாவில் நேரடியாக முதலீடு செய்வதை அனுமதிக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. இது தொடர்பாக பிடிஐ தளத்திற்கு பேட்டி அளித்துள்ள நிதி ஆயோக் உறுப்பினர் அரவிந்த் விர்மானி, இந்த விஷயத்தை ஒரு பொருளாதார நிபுணர் பார்க்கும் விதத்தில் மிகப்பெரிய மாற்றம் உள்ளது எனக் கூறுகிறார். சீனாவில் இருந்து 10 ஆண்டுகள், 15 ஆண்டுகளுக்கும் நாம் பொருட்களை இறக்குமதி செய்ய தான் போகிறோம்.

அதை ஏன் நாம் இறக்குமதி செய்ய வேண்டும்?, சீன நிறுவனங்களை இந்தியாவில் முதலீடு செய்ய அனுமதித்தால் இந்தியாவிலேயே அந்த பொருட்கள் உற்பத்தி செய்யப்படும். இது இந்தியாவின் வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் சீனாவில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதை குறைக்க திட்டமிட்டுள்ள, இதனை நாம் பயன்படுத்தி கொள்ள வேண்டுமென யோசனை தெரிவித்துள்ளார்.
நாம் அண்டை நாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதை விடுத்துவிட்டு சீன நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய அனுமதித்தால் , பொருட்கள் இந்தியாவில் உற்பத்தியாகும். இங்கிருந்து அவற்றை அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யலாம் என கூறுகிறார். இதனால் இந்தியாவில் உற்பத்தி துறை வளர்ச்சி அடையும் மேலும் ஏற்றுமதி துறையும் வளர்ச்சி அடையும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சீனாவில் இருந்து அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதன் மூலம் அமெரிக்காவுக்கான இந்தியாவின் ஏற்றுமதியை நம்மால் எளிதாக அதிகரிக்க முடியும் என கூறுகிறார். ஏப்ரல் 2000 முதல் மார்ச் 2024 வரை இந்தியாவில் பதிவான மொத்த அந்நிய நேரடி முதலீட்டில் சீனாவின் பங்கு 0.37% மட்டுமே. அந்த வகையில் சீனா 22-வது இடத்தில் இருக்கிறது. சீனாவிடம் இருந்து இந்தியா குறைந்தபட்ச அந்நிய நேரடி முதலீட்டைப் பெற்றிருந்தாலும் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் பல மடங்கு உயர்ந்துள்ளது.
2023-24 ஆம் ஆண்டில் இருநாட்டு வர்த்தகம் என்பது 118.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். மேலும் கடந்த நிதியாண்டில் சீனாவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி 8.7% உயர்ந்து 16.67 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.
இந்தியாவை பொறுத்தவரை இரும்புத்தாது, பருத்தி நூல்கள், கைத்தறி, மசாலா பொருட்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள், பிளாஸ்டிக் ஆகியவை தான் சீனாவுக்கான ஏற்றுமதியில் முக்கிய பங்காற்றுகின்றன.
Story written by: Devika


Click it and Unblock the Notifications