இந்தியாவில் ஏழை எளிய குடும்பங்களும் விறகு அடுப்புகளை விடுத்து கேஸ் அடுப்பு பயன்பாட்டுக்கு மாற வேண்டும் என்பதற்காக மத்திய அரசு கடந்த 2016ஆம் ஆண்டு மானிய விலையில் கேஸ் சிலிண்டர் வழங்கும் உஜ்வாலா திட்டத்தை தொடங்கியது. இந்த திட்டத்தின் கீழ் ஏழை குடும்ப பெண்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மானிய விலையில் சிலிண்டர் வழங்கப்பட்டு வந்தது. 10.58 கோடி பேர் உஜ்வாலா திட்டத்தில் மானிய விலையில் சிலிண்டர் பெற்று வருகின்றனர்.
14.2 கிலோ எடை கொண்ட கேஸ் சிலிண்டர்கள் ஆண்டுதோறும் 12 வழங்கப்பட்டு வந்தன. பின்னர் 2022ஆம் ஆண்டு முதல் ஆண்டுக்கு 12 சிலிண்டர் வரை ரூ.200 மானியம் வழங்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டது. இது பயனாளிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டது. பின்னர் இந்த மானியத்தொகை ரூ.300 ஆக உயர்த்தப்பட்டது. இவ்வாறு ஆண்டுதோறும் வழங்கப்படும் மானிய சிலிண்டர் எண்ணிக்கை கடந்த ஆண்டு 9 ஆக குறைக்கப்பட்டது.

இந்நிலையில் உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு இனி ஆண்டுக்கு 4 சிலிண்டர்கள் மட்டுமே மானிய விலையில் கிடைக்கும் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சக கூடுதல் செயலாளர் பிரவீன்மால் கனூஜா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஈரான் போர் காரணமாக கேஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், உஜ்வாலா பயனாளிகளின் சராசரி ஆண்டு நுகர்வுக்கு 4 சிலிண்டர் என்ற எண்ணிக்கை பெருமளவில் ஒத்துப் போவதாக கூறியுள்ளார்.
வளைகுடா போர் பதற்றம் காரணமாக ஏற்கனவே பெட்ரோல், டீசல், கேஸ் விலை, அத்தியாவசிய பொருட்கள் விலைவாசி உயர்ந்துள்ள நிலையில் உஜ்வாலா திட்டத்தில் மானிய சிலிண்டர் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது மக்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.

கடந்த 3 மாதங்களில் மட்டும் வீட்டு உபயோக சிலிண்டர் விலை சுமார் ரூ.100 வரை அதிகரித்து இருக்கிறது. இதன் மூலம் கேஸ் சிலிண்டர் விலை ரூ.950-க்கு மேல் உயர்ந்துள்ளது. இதில் உஜ்வாலா பயனாளிகளுக்கு ரூ.300 மானியம் வழங்கப்படுகிறது. பெரும் தட்டுப்பாடு நிலவி வரும் இந்த சூழலில் சிலிண்டர் ஒன்றின் வினியோகத்துக்கு அரசு ரூ.1,600 வரை செலவிடுகிறது. ஆனாலும் இந்திய குடும்பங்கள் சிலிண்டருக்கு குறைந்த விலையையே செலுத்தி வருகின்றன. அதிலும் உஜ்வாலா பயனாளிகளுக்கு சுமார் ரூ.1,000 வரை சேமிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது என பிரவீன் மால் கனூஜா தெரிவித்துள்ளார்.
திடீரென ஓராண்டுக்கான மானிய விலை சிலிண்டர் எண்ணிக்கையை 9இல் இருந்து 4ஆக அரசு குறைத்துள்ளது. ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 4 சிலிண்டர்கள் எப்படி போதுமானதாக இருக்கும் என கேள்வி எழுப்பும் உஜ்வாலா திட்ட பயனாளிகள் அரசின் இந்த செயல் அதிர்ச்சி தருவதாக கூறுகின்றனர்.உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு ஆண்டுக்கு 4 சிலிண்டர்களுக்கு மேல் பதிவு செய்தால் அவற்றுக்கு மற்ற வாடிக்கையாளர்களை போல முழு தொகை செலுத்த வேண்டும். அதற்கு 300 ரூபாய் மானிய தொகை இனி கிடைக்காது.


Click it and Unblock the Notifications

