மத்திய அரசு தனது 2.1 லட்சம் கோடி ரூபாய் அளவிலான நிதி திரட்டும் திட்டத்தின் முக்கிய இலக்காக மாறியுள்ளது. பாரத் பெட்ரோலியம். இந்நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்து தனியார்மயமாக்கும் திட்டத்தின் கீழ் மத்திய அரசு சுமார் 90,000 கோடி ரூபாய் அளவிலான நிதியை திரட்ட திட்டமிட்டுள்ளது.
பங்குச்சந்தையில் பட்டியலிட்டுள்ள சக போட்டி நிறுவனங்களை ஒப்பிட்டு இணையான மதிப்பிற்குப் பங்குகளை விற்பனை செய்ய உள்ளது.
பாரத் பெட்ரோலியம்
பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் மதிப்பை மத்திய அரசு அதன் பங்கு மதிப்பை மட்டுமே வைத்து மதிப்பிடாது. இந்நிறுவனத்தின் பல்வேறு சொத்துக்கள் ஆகியவற்றின் மதிப்பை ஆய்வு செய்த பின்னரே இந்நிறுவனத்தின் முழுமையான மதிப்பைக் கணிக்க முடியும் என அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
90,000 கோடி ரூபாய்
மேலும் தற்போது மத்திய அரசு திட்டமிட்டுள்ள படி பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் 52.98 சதவீத பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் குறைந்தபட்சம் 90,000 கோடி ரூபாய் அளவிலான நிதியைத் திரட்ட இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
பங்குச்சந்தை நிலவரத்தின் படி பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் 52.98 சதவீத பங்குகளின் மதிப்பு 45,000 கோடி ரூபாயாக இருந்தாலும், இந்நிறுவனத்திடம் அதிகளவிலான சொத்துக்கள் உள்ளது.
52.98 சதவீத பங்குகள்
இந்தச் சொத்துக்களை விற்பனை செய்தாலே 45,000 கோடி ரூபாயை எளிதாகப் பெற முடியும். இதேபோல் இந்தச் சொத்துகளை விற்பனை செய்வதால் எவ்விதமான வர்த்தகப் பாதிப்பும் இருக்காது என்பது கூடுதல் சிறப்பு. எனவே 52.98 சதவீத பங்குகளை விற்பனை செய்யும் போது இந்தச் சொத்துக்களின் மதிப்பையும் கணக்கிடப்படும்.
3 நிறுவனங்கள் போட்டி
இந்தியாவின் 2வது பெட்ரோலியம் சுத்திகரிப்பு நிறுவனமான பார்த் பெட்ரோலியம் நிறுவனத்தின் பங்குகளையும், இந்நிறுவன சொத்துக்களையும் கைப்பற்ற அனில் அகர்வாலின் வேதாந்தா குழுமம் மற்றும் அபோலோ குளோபல், ஐ ஸ்கொயர்ட் கேபிடல் ஆகிய இரு தனியார் அமெரிக்க முதலீட்டு நிறுவனங்கள் விருப்ப விண்ணப்பம் கொடுத்துள்ளது.
பெட்ரோல் பங்க்
இந்திய ரீடைல் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை சந்தையில் சமீபத்தில் நடந்த ரிலையன்ஸ்- BP மற்றும் இதர நிறுவனங்களின் ஒப்பந்த விலையின் படி, நாடு முழுவதும் இருக்கும் பார்த் பெட்ரோலியம் நிறுவனத்தின் 16,000 ரீடைல் விற்பனை பங்குகளின் மதிப்பு மட்டும் சுமார் 80,000 முதல் 1,00,000 கோடி ரூபாய் அளவிலான மதிப்பீட்டைப் பெறும்.
இதர சொத்துக்கள்
இதேபோல் சுத்திகரிப்பு மற்றும் டெர்மினல் நெட்வொர்க் மதிப்பு தலா 40,000 கோடி ரூபாயை மதிப்பீட்டைப் பெறும். இதன் பின்பு பைப்லைன், எல்பிஜி, தொழிற்துறை எரிபொருள் வர்த்தகம், விமான எரிபொருள் வர்த்தகம், ஆயில், கேஸ் விற்பனை, IGL மற்றும் பெட்ரோநெட் எல்என்ஜி நிறுவனத்தில் இருக்கும் பங்குகள் எனப் பலவற்றின் மதிப்பைக் கணக்கிட வேண்டியுள்ளது.
2.1 லட்சம் கோடி ரூபாய்
மத்திய அரசின் 2020-21ஆம் நிதியாண்டுக்கான 2.1 லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்டும் திட்டத்தில் இதுவரை 12,225 கோடி ரூபாய் மட்டுமே திரட்டியுள்ளது. இது அரசின் இலக்கில் மிகப்பெரிய தோல்வியாக இருக்கும் வேளையில், மத்திய அரசின் பல பங்கு விற்பனை முயற்சிகள் இந்த வருடம் பங்குச்சந்தையின் மோசமான வர்த்தகச் சூழ்நிலையின் காரணமாகத் தோல்வி அடைந்தது.


Click it and Unblock the Notifications