டெல்லி: 2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதிப் பற்றாக்குறை மதிப்பீட்டை 4.9 சதவிகிதம் என குறைத்துள்ளார். நிதி பற்றாக்குறை என்பது அரசின் மொத்த வருவாய் மற்றும் மொத்த செலவினங்களுக்கு இடையிலான வேறுபாடு ஆகும். இது அரசாங்கம் எவ்வளவு கடன் வாங்க வேண்டி இருக்கும் என்பதை சுட்டிக்காட்டுகிறது.
கடந்த பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன் நிதி பற்றாக்குறை 5.1% ஆக இருக்கும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் முழு நீள பட்ஜெட்டை தாக்கல் செய்த அவர், 2025 ஆம் நிதி ஆண்டுக்கான நிதி பற்றாக்குறை என்பது ஜிடிபியில் 4.9% இருக்கும் என கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் 2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் உரையை வாசித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025 ஆம் நித்திய ஆண்டிற்கான நிதி பற்றாக்குறை இலக்கு நடப்பு நிதியாண்டிற்கான முந்தைய மதிப்பீடுகளை விட 200 அடிப்படை புள்ளிகள் குறைவாக இருக்கும் என்றார். இடைக்கால பட்ஜெட்டில் மதிப்பிடப்பட்ட 14.13 லட்சம் கோடியை ஒப்பிடுகையில் மொத்த கடன் 14.01 லட்சம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2025-26 ஆம் நிதி ஆண்டுக்குள் பட்ஜெட் பற்றாக்குறையை 4.5% சதவீதம் அல்லது அதற்கும் குறைவாக வைத்திருப்பதையே அரசு நோக்கமாக கொண்டுள்ளது என தெரிவித்தார். 2026-27 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் நிதி பற்றாக்குறையை குறைப்பதே அரசின் முயற்சியாக இருக்கும் என கூறினார். இதன் மூலம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கடன் சதவீத அளவு குறைந்து வரும் என தெரிவித்தார்.
கடந்த மே மாதம் ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு 2.11 டிரில்லியன் ஈவுத்தொகையை வழங்கியது. இது 2023ஆம் ஆண்டு வழங்கிய ஈவுத்தொகையை விட 141% அதிகமாகும். கொரோனா பெருந்தொற்று காலத்தில் வளர்ச்சி மற்றும் நலத்திட்டம் தொடர்பான செலவினங்கள் அதிகரிக்க நிலையில் நிதி பற்றாக்குறை 2020ஆம் நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.8 சதவீதத்தில் இருந்து 2021ஆம் நிதியாண்டில் 9.5 சதவீதமாக அதிகரித்தது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications