மும்பை: இந்திய பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபி தலைவர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் பங்குச்சந்தைகளை ஒழுங்குமுறை படுத்தும் அமைப்பாக செபி அமைப்பு செயல்பட்டு வருகிறது. தற்போது செபியின் தலைவராக மதாபி பூரி புச் செயல்பட்டு வருகிறார். இவருடைய பதவிக்காலம் பிப்ரவரி மாதம் 28ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில் செபி தலைவர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மத்திய நிதித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய பொருளாதார விவகாரங்களுக்கான துறை வெளியிட்டுள்ள நோட்டீஸில் செபி தலைவர் பொறுப்புக்கு பொருத்தமான நபரை தேர்வு செய்வதற்காக இந்திய அரசு விண்ணப்பங்களை வரவேற்கிறது என தெரிவித்துள்ளது. இந்த பதவிக்காலம் அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக செபி தலைவர் பதவி காலம் மூன்று ஆண்டுகள் வரை தான் இருக்கும். ஆனால் இந்த முறை ஐந்து ஆண்டுகள் வரை பதவிக்காலம் இருக்கும் என அரசு அறிவித்துள்ளது.
செபி தலைவராக தேர்வு செய்யும் நபருக்கு மத்திய அரசு செயலாளர் பதவியில் இருக்கும் நபருக்கு இணையான ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது மாதத்திற்கு 5,62,500 ரூபாய் சம்பளமாக கிடைக்கும். இது தவிர வீடு மற்றும் கார் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது செபி தலைவராக இருக்கக்கூடிய மதாபி பூரி புச் கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் 2ஆம் தேதி செபி தலைவராக பதவி ஏற்றார். அதற்கு முன்னர் செபி அமைப்பின் முழு நேர உறுப்பினராக 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2022ஆம் ஆண்டு மார்ச் வரை பொறுப்பு வகித்தார். அவருடைய மூன்றாண்டு பதவிக்காலம் வரும் 28ஆம் தேதி நிறைவடைகிறது. எனவே இந்த பதவிக்கு தகுதியானவர்கள் பிப்ரவரி 17ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.
பொதுவாக செபி தலைவர் பதவியில் இருப்பவர்களுக்கு மூன்று ஆண்டுகள் தான் பதவிக்காலம் இருக்கும். இதற்கு இருவர் மட்டும் இந்த பதவியில் 3 ஆண்டுகளுக்கு மேல் இருந்துள்ளனர். 2011 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 முதல் 2017 மார்ச் 1 வரை செபி தலைவராக யுகே சின்கா மொத்தம் ஆறு ஆண்டுகள் பதவி வகித்தார். அதே போல 2017 மார்ச் 1 முதல் 2022 பிப்ரவரி 28 வரை செபி தலைவராக ஐந்தாண்டு காலம் அஜய் தியாகி பதவி வகித்தார்.
மதாபி பூரி புச்சை பொருத்தவரை செபியின் முதல் பெண் தலைவர் என்ற பெருமை கொண்டவர். இதற்கு முன்பாக ஐசிஐசிஐ செக்யூரிட்டிஸ் நிறுவனத்தின் தலைவராக இருந்தார். அது மட்டும் இன்றி செபியின் முழு நேர உறுப்பினராகவும் 5 ஆண்டுகள் பதவி வகித்தவர். அகமதாபாத்தில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்டில் படித்த மதாபி 1989 ஆம் ஆண்டு ஐசிஐசிஐ வங்கியில் பணிக்கு சேர்ந்தார்.
அதானி குழுமம் மீதான முறைகேடு புகார்களை விசாரிக்கவில்லை, அதற்கு லஞ்சம் பெற்றார் என்பன உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் மதாபி மீது எழுந்தன. செபி அமைப்பிற்குள் மோசமான பணி கலாச்சாரத்தை கொண்டு வந்தார் என்பன உள்ளிட்ட புகார்களும் முன் வைக்கப்பட்டன. அதே வேளையில் சந்தையை ஒழுங்குப்படுத்த சில தைரியமான நடவடிக்கைகளை எடுத்தார் என்ற பெயரும் இவருக்கு உண்டு.
Story written by: Devika


Click it and Unblock the Notifications