இந்தியாவில் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு வழிகளில் நிதி திரட்ட திட்டமிட்டு வரும் வேளையில், IRCTC நிறுவனத்தின் 15 முதல் 20 சதவீத பங்குகளை ஆஃபர் பார் சேல் பிரிவில் விற்பனை செய்யத் திட்டமிட்டு வருகிறது. இந்தப் பங்கு விற்பனையை நடத்த முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மை பிரிவு வர்த்தக வங்கிகளின் விண்ணப்பங்களை இன்று (செப் 10) பெற உள்ளது.
மத்திய அரசு தரப்பில் IRCTC நிறுவனத்தின் பங்குகள் எவ்வளவு விற்பனை செய்யப்படுகிறது என இதுவரை வெளிப்படையாக அறிவிக்கப்படாத நிலையில், விற்பனை பொறுப்புகளை ஏற்று நடத்தும் வங்கியைத் தேர்வு செய்த பின்பு அரசு முழு விபரத்தை வெளியிடும் எனத் தெரிகிறது.
செபி கட்டுப்பாடுகள்
IRCTC நிறுவனத்தில் தற்போது மத்திய அரசு சுமார் 87.40 சதவீத பங்குகளை வைத்துள்ளது. பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி விதிமுறைகளின் படி 75 சதவீத பங்குகளுக்கு மேல் ஒரு தரப்பு பங்குகளை வைத்திருக்கக் கூடாது. இதனால் நிதி தேவை இருக்கும் இந்தச் சூழ்நிலையில் IRCTC பங்குகளை விற்பனை செய்ய அரசு முடிவு செய்துள்ளது.
பலகட்ட விற்பனை
மேலும் இந்தப் பங்கு விற்பனையை ஒன்றுக்கும் அதிகமான கட்டங்களாக நடத்த மத்திய அரசு விற்பனை வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இதனால் ஐஆர்சிடிசி பங்குகள் ஓரே சமயத்தில் விற்பனை செய்யப்படாமல் பல பகுதிகளாக விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வே
இந்தியாவின் மிகப்பெரிய போக்குவரத்து சேவையான ரயில்வே துறையின் ஓரே ஆஸ்தான கேட்டரிங், ஆன்லைன் டிக்கெட் விற்பனை மற்றும் குடிநீர் விற்பனை செய்யும் அமைப்பாக உள்ளது. இந்நிறுவனம் இந்திய பங்கு சந்தையில் 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பட்டியலிடும் போது முதலீட்டாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை அடைந்தது.
பங்கு மதிப்பு
IRCTC நிறுவனம் ஐபிஓ மூலம் பங்குச்சந்தையில் இறங்கும் போது ஒரு பங்கு விலை 645 ரூபாய்க்குப் பங்குகள் விற்பனை செய்யப்பட்டது. இந்த 11 மாத காலத்தில் IRCTC நிறுவனப் பங்குகள் அதிகப்படியாக ஒரு பங்கு விலை 1994.00 ரூபாய்க்கு வர்த்தகமானது. செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் IRCTC பங்குகள் 2.89 சதவீதம் சரிந்து 1,374 ரூபாய்க்கு வர்த்தகம் நிறைவடைந்தது.
2.10 லட்சம் கோடி ரூபாய்
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நடப்பு நிதியாண்டில் அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் நிறுவனப் பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் சுமார் 2.10 லட்சம் கோடி ரூபாய் அளவிலான நிதியைத் திரட்ட இலக்கு நிர்ணயம் செய்துள்ள நிலையில், ஐஆர்சிடிசி பங்கு விற்பனை மூலம் இந்த இலக்கை அடைய ஒரு வாய்ப்பாக அமையும்.
இந்த 2.10 லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்டும் திட்டத்தில் பொதுத் துறை நிறுவனப் பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் 1.20 லட்சம் கோடி ரூபாயும், மீதமுள்ள 90,000 கோடி ரூபாய் நிதியை நிதியியல் நிறுவனப் பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் திரட்ட முடிவு செய்துள்ளது மத்திய அரசு.


Click it and Unblock the Notifications