டெல்லி: இந்தியாவில் உணவு, உரம், சமையல் எரிவாயு போன்ற பொருட்களுக்கு அரசு மானியம் வழங்குகிறது. இந்த மானியம் நேரடியாக உற்பத்தியாளர்களிடமோ அல்லது மக்களிடமோ வழங்கப்படும். அரசின் மக்கள் நல திட்டங்களில் மானியங்கள் முக்கிய இடம் வகிக்கின்றன. ஆனால் இந்த முறை அரசு மானிய ஒதுக்கீட்டை குறைத்துள்ளது.
பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். இந்த பட்ஜெட்டில் பல்வேறு விஷயங்களை நாம் குறிப்பிட்டு கவனிக்க வேண்டியிருக்கிறது. அதில் முக்கியமானது மானியங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறைப்பு. இதன்படி 2024-25 ஆம் நிதியாண்டில் உணவு, உரம் மற்றும் எரிபொருளுக்கான மானியம் 7.8% குறைக்கப்பட்டுள்ளது.

அதாவது 2024ஆம் நிதியாண்டில் மொத்த மானிய ஒதுக்கீடு 4,13,446 கோடி ரூபாயாக இருந்தது. ஆனால் நடப்பு நிதியாண்டில் மொத்த மானிய ஒதுக்கீடு 3, 81,175 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் கணிக்கப்பட்ட மதிப்பீடுகளுடன் ஒத்துப் போகிறது.
பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள விவரங்களின் அடிப்படையில் உணவு மானியம் 2,05,250 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது இது 2024 ஆம் நிதியாண்டில் 2 ,12,332 கோடி ரூபாயாக இருந்த நிலையில் தற்போது குறைக்கப்பட்டுள்ளது. கிட்டதட்ட 80 கோடி மக்களின் நலனுக்காக உணவு மானியம் வழங்கப்படுகிறது. அரசாங்கத்தால் கொள்முதல் செய்யப்படும் உணவு தானியங்களின் பொருளாதார செலவிற்கும், தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் மற்றும் பிற நல திட்டங்களின் கீழ் அவற்றின் விற்பனை வருமானத்திற்கும் இடையிலான வேறுபாட்டை இந்த மானியத் தொகை சரி செய்கிறது.
உரங்களுக்கான மானிய ஒதுக்கீடு 2024 ஆம் நிதியாண்டில் 1,88,894 கோடி ரூபாயாக இருந்து நடப்பு நிதியாண்டில் 1, 64,000 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. குறைந்த விலையில் விவசாயிகளுக்கு உரங்களை விற்பனை செய்வதற்கு உற்பத்தியாளர்களுக்கான மானியத்தை வழங்குகிறது. இந்த திட்டம் யூரியா மற்றும் டிஏபி மற்றும் எம்ஓபி போன்ற யூரியா அல்லாத உரங்களுக்கும் மானியம் வழங்குகிறது .
பெட்ரோலிய பொருட்களுக்கான மானிய தொகை குறிப்பாக சமையல் எரிவாயு உள்ளிட்டவைகளுக்கான மானிய ஒதுக்கீடு 2024-ஆம் நிதியாண்டில் 12,240 கோடி ரூபாயாக இருந்து நடப்பு நிதியாண்டில் 11,925 கோடி ரூபாய் என குறைக்கப்பட்டுள்ளது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications