மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு சம்பள கமிஷனின் பரிந்துரைகள் அடிப்படையில்தான் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் ஆகியவை நிர்ணயம் செய்யப்படுகிறது. தற்போது ஏழாவது சம்பள கமிஷனின் பரிந்துரை அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளமும் ஓய்வூதியதாரர்களுக்கான ஓய்வூதிய தொகையும் வழங்கப்படுகிறது.
ஏழாவது சம்பள கமிஷனின் பரிந்துரைகள் வரும் டிசம்பர் மாதத்துடன் காலாவதி ஆகின்றன. இதனை அடுத்து ஜனவரி மாதம் மத்திய அரசு எட்டாவது சம்பள கமிஷன் அமைப்பது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது. இந்த சம்பள கமிஷனில் உறுப்பினர்கள் மற்றும் தலைவர் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு அவர்கள் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் பல்வேறு துறைகளிடம் கலந்துரையாடி மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளத்தை நிர்ணயம் செய்வார்கள். இதனை மத்திய அரசுக்கு பரிந்துரையாக அனுப்புவார்கள்.

அரசு இந்த பரிந்துரையை ஏற்று ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான ஓய்வூதிய தொகை உள்ளிட்டவற்றை வழங்கும். அண்மையில் மத்திய அரசின் நிதித்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படக்கூடிய செலவினங்களுக்கான துறை புதிதாக 42 பதவிகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டது. இந்த 42 பேரும் சம்பள கமிஷனில் பணியாற்றுவதற்காக தான் தேர்வு செய்யப்படுகிறார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன . ஏனெனில் ஏழாவது சம்பள கமிஷனுக்கு அரசு 45 பேரை வேலைக்கு தேர்வு செய்தது.
எட்டாவது சம்பள கமிஷனுக்கான தலைவர் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டு விட்டதாகவும் கூடிய விரைவில் அரசு அதற்கான அறிவிப்பை அரசிதழில் வெளியிடும் என்றும் சொல்லப்படுகிறது. இதனிடையே மத்திய அரசு ஊழியர்களுக்கான சங்கங்கள் எட்டாவது சம்பள கமிஷன் தங்களுடைய சம்பளம் மற்றும் ஓய்வூதியத் தொகை நிர்ணயம் செய்வதற்காக பயன்படுத்தப்படும் Fitment factor 2.86ஆக வைத்துக்கொள்ள வேண்டும் என கோரிக்கையை முன் வைத்துள்ளனர். ஏழாவது சம்பள கமிஷன் 2.57 என்ற Fitment factor அடிப்படையில்தான் மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளத்தை பரிந்துரை செய்தது.
எட்டாவது சம்பள கமிஷனில் இந்த Fitment factor ஐ 2.86ஆக உயர்த்த வேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு Fitment factor 2.86 என கொண்டு கணக்கீடு செய்யப்பட்டால் தற்போது 9000 ரூபாய் ஓய்வூதியம் வாங்கக்கூடிய ஓய்வூதியதாரர்களுக்கு எட்டாவது சம்பள கமிஷனின் மூலம் ஓய்வூதிய தொகை 25,740 ரூபாயாக உயரும் என சொல்லப்படுகிறது. அதாவது 186 சதவீதம் வரை ஓய்வூதியம் உயரும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கான சங்கம் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான சங்கங்கள் பணவீக்கத்தை அடிப்படையாகக் கொண்டு சம்பள கமிஷன் Fitment factor ஐ உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகிறது. பிட்மண்ட் ஃபேக்டர் 2.86 ஆக வைத்துக்கொண்டால் மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளமும் பல மடங்கு அதிகரிக்கும்.
கூடிய விரைவில் அரசு சம்பள கமிஷனுக்கான உறுப்பினர்கள் மற்றும் தலைவர் உள்ளிட்ட விவரங்களை வெளியிடப் போகிறது. சம்பள கமிஷன் தற்போது அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம், அலோவென்சுகள் மற்றும் பிற பணப்பலன்களை ஆய்வு செய்து சம்பளத்தை நிர்ணயம் செய்வார்கள் என்று சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications