டெல்லி: பட்ஜெட்டில் என்னென்ன அறிவிப்புகள் வெளியாக கூடும் என பரபரப்பாக பேசப்பட்டு வரக்கூடிய சூழலில் குறைந்தபட்ச கார்ப்பரேட் வரி குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது என டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது . பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு மற்றும் ஜி 20 நாடுகளின் ஒப்புதலோடு பில்லர் 2 என்ற சர்வதேச குறைந்தபட்ச கார்ப்பரேட் வரி விதிக்கும் நடைமுறை சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இன்னும் இந்தியாவில் அமல்படுத்தப்படவில்லை.
பொதுவாக ஒரு நாட்டில் இயங்கக்கூடிய நிறுவனங்கள் வரி சலுகைகளுக்காக வேறொரு நாட்டில் தன்னுடைய லாபத்தை பெரிய அளவில் முதலீடு செய்கின்றன. இதன் வாயிலாக அந்த நிறுவனங்கள் வரி ஏய்ப்பிலும் ஈடுபடுகின்றன.

எனவே நிறுவனங்களின் வரி ஏய்ப்பை தடுக்கவும், அதனால் கிடைக்கும் கருப்பு பணத்தை வேறொரு நாடுகளில் முதலீடு செய்து அதிக அளவில் லாபம் ஈட்டுவதை தடுக்கவும் புதிய நடைமுறையை உருவாக்க வேண்டும் என ஜி 20 நாடுகளின் தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அதன்படி சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஜி 20 நாடுகளின் கூட்டத்தில் அனைத்து நாடுகளிலும் வர்த்தக நிறுவனங்களுக்கு குறைந்தபட்ச கார்ப்பரேட் வரியை விதிக்க முடிவு செய்யப்பட்டது.
அதாவது அனைத்து நாடுகளிலும் சர்வதேச கார்ப்பரேட் நிறுவனங்கள் குறைந்தபட்சம் 15 சதவீதம் வரி செலுத்த வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. இதனால் சர்வதேச நிறுவனங்கள் குறைந்த வரி வசூலிக்கும் நாடுகளில் போட்டி போட்டுக் கொண்டு முதலீடு செய்வது குறையும் என சொல்லப்பட்டது. இந்த குறைந்தபட்ச கார்ப்பரேட் வரிவிதிப்பு நடைமுறையானது ஆண்டுக்கு 750 மில்லியன் யூரோக்கள் வருமானம் ஈட்டக்கூடிய பன்னாட்டு நிறுவனங்களுக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டது.
இதன் மூலம் இந்த நிறுவனங்கள் அவர்கள் செயல்படக்கூடிய நாடுகளில் குறைந்தபட்சம் வரியை செலுத்தியே ஆக வேண்டும். ஒரு வேளை அந்த நாடுகளில் 15% குறைவாக வரி வசூல் செய்யப்பட்டால் அங்கே டாப் அப் வரி முறை அமலாகும் என சொல்லப்படுகிறது. ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், இங்கிலாந்து ,சுவிட்சர்லாந்து, சிங்கப்பூர் ஆகியவை இந்த நடைமுறைக்கு இணங்குவதாக அறிவித்து விட்டன. இந்தியா சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இதுவரை இதனை அமல்படுத்துவது குறித்த தங்களுடைய நிலைப்பாட்டை வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் வரக்கூடிய பட்ஜெட்டில் மதிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறைந்தபட்ச கார்ப்பரேட் வரி விதிப்பு குறித்த தகவலை வெளியிடுவார் என சொல்லப்படுகிறது. மத்திய அரசு தற்போது உள்ள வருமான வரி சட்டத்தில் புதிய பிரிவினை சேர்க்கலாம் அல்லது அனைவரின் கருத்துக்களையும் பெறுவதற்காக புதிய வரைவினை வெளியிடலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
Story written by: Devika


Click it and Unblock the Notifications