டெல்லி: இந்தியாவில் அண்மைகாலமாக சோலார் எனப்படும் சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரித்து பயன்படுத்தும் போக்கு அதிகரித்து வருகிறது. வீடு, அலுவலகங்கள், பெரு நிறுவனங்களில் கூட சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டு வருவதை நாம் காண்கிறோம்.
இது போல சோலார் பேனல்களை அமைத்து மின்சாரம் தயாரித்து பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு மானியமும் வழங்குகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜெட்டில் மேற்கூரை சோலார் மின் உற்பத்தி திட்டத்தை அறிமுகம் செய்த மத்திய அரசு இந்த திட்டத்தின் கீழ் சோலார் மின் உற்பத்தியை பயன்படுத்தும் குடும்பங்களுக்கு 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. இதனால் சோலார் பேனல்கள் அமைக்க மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து சோலார் பேனல்கள் மற்றும் அமைப்புகளை இறக்குமதி செய்வதற்கு கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
வெளிநாடுகளில் இருந்து குறைந்த விலையில் குறிப்பாக சீனாவில் இருந்து சோலார் பேனல்கள் மற்றும் சோலார் மாடியூல் இறக்குமதி செய்யப்படுவதாகவும், இதனால் தங்களது தொழில் பாதிக்கப்படுவதாகவும் உள்ளூரை சேர்ந்த சோலார் பேனல் மற்றும் சோலார் அமைப்பு உற்பத்தியாளர்கள் புகார் தெரிவித்து வந்தனர்.
இதனை அடுத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக தெரிகிறது.
உள்ளூர் தேவைக்கு ஏற்ப சோலார் பேனல்கள் கிடைக்காததால் கடந்த ஆண்டு சோலார் பேனல் மற்றும் சோலார் அமைப்புகளுக்கான இறக்குமதியில் இருந்த விதிகளை மத்திய அரசு தளர்த்தியது. இதனால் சீனா மற்றும் வியட்நாமில் இருந்து சோலார் பேனல்கள் குவிந்தன.
ஆனால் இவை தரமற்றவை என்றும் விலை குறைவாக இருப்பதால் தங்களின் விற்பனை பாதிக்கப்படுகிறது என்றும் புகார்கள் எழுந்தன.
மத்திய அரசின் விதிமுறைகள் தளர்வுகள் மார்ச் 31 அன்றுடன் முடிகிறது. எனவே ஏப்ரல் 1 முதல் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு பழைய படி கடுமையான கட்டுப்பாடுகள் இருக்கும் என மத்திய புதுப்பிக்கதக்க மின்சார அமைச்சகம் தனது இணைய தளத்தில் தெரிவித்துள்ளது.
இறக்குமதி செய்யப்பட்ட சோலார் அமைப்புகளை இந்தியாவில் பயன்படுத்துவதற்கும் இந்த விதி தடை விதிக்கவும் வாய்ப்பு உள்ளது. எனவே வரும் நாட்களில் உள்ளூரில் தயாரிக்கப்படும் சோலார் அமைப்புகளின் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications