இந்தியாவில் சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரித்து பயன்படுத்துவதை அரசு ஊக்குவித்து வருகிறது. வீடுகளில் சோலார் பேனல்களை அமைத்தால் மானியம், மின்சார கட்டணத்தில் சலுகை என பல அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இதனால் சோலார் பேனல்களை தயாரித்து வழங்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து வருகிறது. ஆனால் இதில் தான் ஒரு பிரச்னை இருக்கிறது. சோலார் பேனல்களில் பொருத்தப்படும் பெரும்பாலான பொருட்கள் சீனாவிடம் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகின்றன.

குறிப்பாக சோலார் செல்கள் எனப்படும் முக்கிய பாகம் முதன்மையாக சீனாவிடம் இருந்தே இறக்குமதி செய்து வருகிறோம். இதனை கட்டுப்படுத்த அரசு திட்டமிட்டுள்ள நிலையில், இந்தியாவிலேயே சோலார் செல்கள் உற்பத்தி அதிகரித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் சோலார் செல் உற்பத்தி திறன் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் ஐந்து மடங்கு அதிகரித்து 30 கிகாவாட்ஸ் என்ற அளவை எட்டும் என புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையின் செயலாளர் பூபிந்தர சிங் பல்லா தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் இந்தியா சோலார் பேனல்களுக்கு சீனா உள்ளிட்ட நாடுகளை சார்ந்திருப்பது குறையும் என்றும் அடுத்த ஆண்டு சோலார் செல் இறக்குமதிக்கு மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வரும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் இந்தியாவுக்கு தேவையான பொருளை உள்நாட்டிலேயே தயாரிப்பது என்ற பிரதமர் நரேந்திர மோடியின் இலக்கினை எட்ட முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். ஏற்கனவே சர்வதேச அளவில் சீனாவில் தான் அதிக எண்ணிக்கையில் சோலார் பேனல்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்கிறது. இவற்றில் பெரும்பாலான சோலார் பேனல்கள் குறைந்த தரத்தில் இருப்பதாக இந்தியாவை சேர்ந்த உற்பத்தியாளர்கள் புகார் கூறி வந்தனர்.
சர்வதேச அளவில் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் கூட சீன நிறுவனங்களின் சோலார் தயாரிப்புகளால் தங்களுடைய சோலார் தயாரிப்புகள் விற்பனையாவதில்லை என வியாபாரிகள் புகார் கூறி வருகின்றனர் .இதனை அடுத்து அமெரிக்க அரசு கடந்த மாதம் சீனாவில் இருந்து சூரிய மின் சக்தி தொடர் சம்பந்தப்பட்ட பொருட்களை இறக்குமதி செய்வதற்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது.
இந்தியாவிலும் கூட பல்வேறு சோலார் பேனல் உற்பத்தியாளர்களும் சீனாவில் இருந்து தரம் குறைவான பொருட்கள் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படுவதாக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். இதனால் தங்களின் பொருட்கள் விற்பனையாவதில்லை என கூறுகின்றனர்.
எனவே மத்திய அரசு அனுமதிக்கும் சோலார் மாடல்களை மட்டுமே இறக்குமதி செய்ய முடியும் என்ற கட்டுப்பாடு அமலில் உள்ளது. இந்நிலையில் இந்தியாவிலேயே சூரிய மின் சக்தி தயாரிப்புக்கு தேவையான பொருட்கள் உற்பத்தி அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக கூடிய விரைவில் மத்திய அரசு சீனாவில் இருந்து சோலார் செல்கள் மற்றும் பிற பாகங்களை இறக்குமதி செய்வதற்கு கட்டுப்பாடுகளை கடுமையாக்க உள்ளது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications