அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் அதிபராக பதவியேற்றதை அடுத்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை அறிவித்து வருகிறார். அப்படி அமெரிக்க அரசின் செயல் திறன்களை மேம்படுத்துவதற்காக டொனால்ட் டிரம்ப் உலகின் நம்பர் ஒன் பணக்காரரும் டெஸ்லா நிறுவன தலைவருமான எலான் மஸ்க் தலைமையில் அரசு செயல் திறன் துறை என்ற பெயரில் ஒரு துறையை நிறுவியுள்ளார்.
அமெரிக்க அரசு செலவினங்களை குறைப்பது, அரசு பணியாளர்களின் செயல் திறன்களை மேம்படுத்துவது, இயன்ற அளவு தொழில்நுட்பங்கள் மூலம் அரசு பணிகளை மேற்கொள்வது என்பன உள்ளிட்ட பணிகளை எல்லாம் எலான் மஸ்க் தலைமையிலான இந்த அரசு செயல் திறன் துறை (DOGE) மேற்கொள்ள இருக்கிறது. ஆனால் இப்படி ஒரு துறை தேவையா என பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் டொனால்ட் டிரம்ப் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய எலான் மஸ்க், அரசு செலவினங்களை குறைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் திவால் நிலைக்கு சென்று விடும் என கூறினார்.
குறிப்பாக அரசின் பட்ஜெட் பற்றாக்குறையை குறிப்பிட்ட அவர் கடந்த நிதியாண்டில் இது 1.8 டிரில்லியன் டாலர்களாக இருக்கிறது என்றார். கடன்களுக்கு அரசு அதிகபட்ச வட்டியை செலுத்தி வருகிறது என கூறிய அவர் அரசு தன்னுடைய செலவினங்களை குறைத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது என்றார்.
இந்த சிக்கன நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றால் திவால் நிலைக்கு தான் நாம் செல்ல வேண்டும் என கூறினார். அரசு செயல் திறன் துறை மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை நியாயப்படுத்தி அவர் பேசினார்.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதும், அரசு செயல் திறனை மேம்படுத்துவதற்காக அரசு செயல் திறன் துறையை உருவாக்கினார். இந்த குழு பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக அரசின் கீழ் செயல்பட்டு வந்த சில முகமைகள் மூடப்பட்டுள்ளன.
அரசு ஊழியர்கள் தாங்களாகவே வேலை விட்டு செல்ல வேண்டும் என்றும் அவர்களுக்கு ஏழு மாதம் வரை ஊதியம் வழங்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் இந்த நடவடிக்கைகளுக்கு அரசு ஊழியர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது தொடர்பாக நீதிமன்றங்களிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஒவ்வொரு அரசு துறையும் தங்கள் துறையிலிருந்து வெளியேறும் நான்கு ஊழியர்களுக்கு ஒரு ஊழியரை மட்டுமே புதிதாக பணி நியமனம் செய்ய வேண்டும் என டிரம்ப் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் அரசுத் துறைகள் பணியாட்களை தேர்வு செய்யும் போது அரசு செயல் திறன் துறையிடம் ஆலோசனை செய்த பிறகே அந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications