அதானி குழும பங்குகளின் தொடர் சரிவில் இருந்து மீள முக்கியமான காரணமாக இருந்தது ஆஸ்திரேலிய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட GQG Partners நிறுவனத்தின் 1.87 பில்லியன் டாலர் முதலீடு என்றால் மிகையில்லை.
இந்த முதலீடு மிகவும் ஸ்பெஷலான ஒன்று, ஜனவரி 24 ஆம் தேதி அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ரிசர்ச் அதானி குழுமம் குறித்து அறிக்கை வெளியிட்ட பின்பு புதிய முதலீடுகளையும், கடன்களையும் பெற முடியாமல் தவித்துக்கொண்டு இருந்த நிலையில் ராஜீவ் ஜெயின் தலைமையிலான GQG Partners பெரும் தொகையை முதலீடு செய்து 4 முக்கியமான நிறுவனத்தில் குறிப்பிடத்தக்க அளவிலான பங்குகளை கைப்பற்றி முக்கிய முதலீட்டாளராக மாறியது.
இந்த நிலையில் GQG Partners மீண்டும் முதலீடு செய்ய வாய்ப்பு உள்ளதாக புதன்கிழமை தெரிவித்துள்ளது.
அதானி குழுமம்
அதானி குழுமத்தின் அதானி எண்டர்பிரைசர்ஸ் நிறுவனத்தில் 3.4 சதவீத பங்குகளும், அதானி போர்ட்ஸ் & SEZ 4.1 சதவீத பங்குகளும், அதானி டிரான்ஸ்மிஷன் நிறுவனத்தில் 2.5 சதவீத பங்குகளும், அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தில் 3.5 சதவீத பங்குகள் என மொத்தம் 4 நிறுவனங்களில் சுமார் 21 கோடி பங்குகளை அமெரிக்காவில் தலைமையிடமாக கொண்டு ஆஸ்திரேலிய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு முதலீட்டு அலோசனை வழங்கும் GQG Partners Inc நிறுவனம் சுமார் 15,446 கோடி ரூபாய்க்கு வாங்கியது.
GQG Partners
அதானி குழுமத்தில் முதலீடு செய்தது குறித்து GQG Partners சேர்மன் மற்றும் தலைமை முதலீட்டு அதிகாரி ராஜீவ் ஜெயின் பேசுகையில், எங்களுடைய நிறுவனம் அதானி குழுமத்தின் நிதி தரவுகளை முழுமையாக ஆய்வு செய்து, ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை குற்றச்சாட்டுகளுக்கு தொடர்பு இல்லாமல் இருந்தது உறுதி செய்த பின்பு தான் முதலீடு செய்துள்ளோம் என கடந்த வாரம் தெரிவித்தார்.
ராஜீவ் ஜெயின்
இந்த நிலையில் மார்ச் 8 ஆம் தேதி GQG Partners அதானி குழுமத்தில் தனது முதலீட்டை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என ராஜீவ் ஜெயின் தெரிவித்துள்ளார். எங்களுடைய திட்டமே 15,446 கோடி ரூபாய் முதலீட்டின் மூலம் எங்களுடைய பொசிஷனை உருவாக்கிவிட்டு, அதன் மூலம் செயல்பாடுகளை ஆய்வு செய்து திட்டமிட்ட முழுமையான தொகையை முதலீடு செய்வது தான். தற்போது முழுமையாக தொகையை இன்னும் முதலீடு செய்யவில்லை என ராஜீவ் ஜெயின் தெரிவித்துள்ளார்.
முதலீட்டாளர்கள்
அடுத்தக்கட்ட முதலீடுகளுக்காக ராஜீவ் ஜெயின் அமெரிக்காவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு சென்று இந்த வாரம் முதலீட்டாளர்கள் உடன் பேச உள்ளார். ராஜீவ் ஜெயின் ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பென்ஷன் பண்ட் நிறுவனத்துடன் பேச உள்ளார்.
தேசிய பங்குச்சந்தை கண்காணிப்பு
புதன்கிழமை முதல் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் தேசிய பங்குச்சந்தையின் கூடுதல் கண்காணிப்பில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளது. சுமார் ஒரு கண்காணிப்புக்கு பின்பு தற்போது ASM-ல் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளது. பிப்ரவரி மாத தொடக்கத்தில் அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ் மற்றும் அம்புஜா சிமெண்ட்ஸ் ஆகிய 3 நிறுவனங்களை கூடுதல் கண்காணிப்பில் வைக்கப்பட்டது.


Click it and Unblock the Notifications