நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் மானிய விலையிலும் , இலவசமாகவும் அரிசி, பருப்பு, கோதுமை மற்றும் தானியங்கள், எண்ணெய் உள்ளிட்ட சமையல் பொருட்கள் வழங்கப்படுகின்றன. இந்தியாவை சேர்ந்த கோடிக்கணக்கான மக்களுக்கு ரேஷன் கடைகளில் கிடைக்க கூடிய இந்த பொருட்கள் தான் அவர்களின் முக்கிய உணவு ஆதாரமாக இருக்கிறது.
மத்திய, மாநில அரசுகள் சார்பில் வழங்கக்கூடிய இலவச மற்றும் மானிய விலையிலான பொருட்கள் சரியான பயனாளிகளுக்கு மட்டுமே சென்று சேர்வதை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் அவ்வப்போது ரேஷன் அட்டைகளில் கேஒய்சி சரிபார்ப்பு என்பது நடத்தப்படுகிறது. அதாவது ரேஷன் அட்டையில் இருக்கக்கூடிய அனைத்து உறுப்பினர்களின் கேஒய்சி விவரங்களும் சரிபார்க்கப்பட்டு அப்டேட் செய்யப்படுகின்றன.

இதன் அடிப்படையில் போலி ரேஷன் அட்டைகள் நீக்கப்படுகின்றன. இதற்கிடையே பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்வதில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வர மத்திய அரசு ஒரு புதிய யோசனையை கொண்டு வந்திருக்கிறது. இதற்காக தானிய ஏடிஎம்களை பயன்பாட்டுக்கு கொண்டு வர அரசு முடிவு செய்திருக்கிறது. இதன் முதல் கட்டமாக குஜராத் மாநிலத்தின் காந்தி நகரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தானியங்களை ஏடிஎம் மூலம் வழங்கும் செயல்முறையை தொடங்கி வைத்திருக்கிறார்.
விரைவில் நாடு முழுவதும் இது நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என அவர் தெரிவித்திருக்கிறார். இந்த புதிய நடைமுறையின் மூலம் ரேஷன் பொருள் விநியோகத்தில் நடைபெறக்கூடிய மோசடிகள் தடுக்கப்படும் என்றும் ரேஷன் பொருள் விநியோகம் நடைமுறையே முழுவதுமாக வெளிப்படை தன்மை கொண்டதாக மாறும் என்றும் தெரிவித்திருக்கிறார். பயனாளிகளுக்கு அனைத்து பொருட்களும் சரியாக கிடைப்பது உறுதி செய்யப்படும் என அவர் சுட்டிக் காட்டி இருக்கிறார்.

அன்னபூர்தி ஏடிஎம் மிஷின் என்ற பெயரில் தொடங்கப்பட்டிருக்கும் இந்த ஏடிஎம் மெஷின் 35 வினாடிகளில் 25 கிலோ அரிசியை விநியோகம் செய்கிறது. அடுத்த மூன்றிலிருந்து நான்கு ஆண்டுகளில் நாடு முழுவதும் இது பயன்பாட்டுக்கு வரும் என அவர் தெரிவித்திருக்கிறார். எனவே ரேஷன் கடைகளில் ரேஷன் பொருட்களை எடை போடுவதில் நடக்கும் மோசடிகள் தடுக்க முடியும். எந்தெந்த ரேஷன் அட்டை பயனாளிகளுக்கு எந்தெந்த பொருட்கள் சென்று சேருமோ அது முறையாக சென்று சேரும்.
முதல்கட்டமாக அனைத்து மாவட்டங்களிலும் குறிப்பிட்ட ரேஷன் கடைகளில் தானியம் வழங்கும் ஏடிஎம் இயந்திரங்கள் பொருத்தப்பட்டு சோதனை செய்யப்பட உள்ளன. இந்த சோதனை அடுத்து நாடு முழுவதும் ரேஷன் கடைகளில் இந்த இயந்திரங்கள் வைக்கப்பட்டு விடும். இந்த இயந்திரங்கள் 24 மணி நேரமும் செயல்படும். அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் டிஜிட்டல் கார்டு வழங்கப்படும் அதனை ஸ்கேன் செய்தால் போதும் உங்கள் கார்டுக்கு கிடைக்க வேண்டிய பொருட்களை இயந்திரமே வழங்கிவிடும்.


Click it and Unblock the Notifications