சென்னை: ஒரு நிறுவனத்தில் நீண்ட காலம் பணியாற்றும் ஊழியர், பணியை விட்டு செல்லும் போது அந்த நிறுவனம் சார்பில் GRATUITY என கூறப்படும் பணிக்கொடை வழங்கப்படுகிறது. நீண்ட காலம் நிறுவனத்தில் பணியாற்றியதை மதிக்கும் வகையில் இது வழங்கப்படுகிறது.
மத்திய அரசு சமீபத்தில் பணிக்கொடை தொடர்பான விதிகளை மாற்றி அமைத்தது. ஆனால் இது பணிக்கொடை மீதான வரிகள் தொடர்பானது. அதாவது ரூ.20 லட்சம் வரையிலான பணிக்கொடை வரி விலக்கு வரம்பு என்பது ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஒரு நிறுவனத்தில் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வேலை செய்திருந்தால் அந்த ஊழியர் வேலை விட்டு செல்லும்போது அல்லது ஓய்வு பெறும்போது அவர் பணி செய்த நிறுவனம் சார்பில் அவருக்கு பணிக்கொடை வழங்கப்பட வேண்டியது கட்டாயமாகும். ஒருவேளை அந்த ஊழியர் திடீரென உயிரிழந்தாலோ அல்லது விபத்து காரணமாக வேலை விட்டு வெளியேறினாலோ அவரது நாமினிக்கு இந்த தொகையானது வழங்கப்பட வேண்டும்.
பணிக்கொடை சட்டம் 1972 இன் படி ஒரு நபருக்கு அதிகபட்சமாக 25 லட்சம் வரை பணிக்கொடை வழங்கலாம். பணிக்கொடை பெறுவதற்கு அந்த ஊழியர் குறிப்பிட்ட அந்த ஒரு நிறுவனத்தில் தொடர்ச்சியாக ஐந்து ஆண்டுகளுக்கு வேலை செய்திருக்க வேண்டும்.
ஒரு வேளை நான்கு ஆண்டுகள் 11 மாதங்கள் வேலை செய்திருந்தால் 5 ஆண்டுகள் என கணக்கிடப்படும். ஆனால் ஊழியர் ஒரு விபத்தினாலோ அல்லது திடீரென மரணத்தை எய்திருந்தாலோ இந்த விதி பொருந்தாது.
தற்போது பணிக்கொடை எவ்வாறு கணக்கீடு செய்யப்படுகிறது என்பதை பார்க்கலாம்.
மொத்த பணிக்கொடை = இறுதியாக பெறப்பட்ட ஊதியம் X 15/ 26 X நிறுவனத்தில் பணியாற்றிய ஆண்டுகளின் எண்ணிக்கை.
ஒரு வேளை நீங்கள் ஒரே நிறுவனத்தில் ஏழு ஆண்டுகளுக்கு வேலை செய்துள்ளீர்கள், நீங்கள் கடைசியாக அந்த நிறுவனத்தில் இந்த பெற்ற சம்பளம் ரூ.35,000 என வைத்துக் கொள்வோம், இந்த ரூ.35,000 அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படி ஆகியவற்றை உள்ளடக்கியது. .
அப்படியெனில் உங்களுக்கு கிடைக்கும் பணிக்கொடை
(35000) x (15/26) x (7) = ரூ. 1,41,346.
அதாவது நீங்கள் வேலையை விடும் போது உங்களுக்கு பணிக்கொடையாக ரூ.1,41,346 கிடைக்கும்.
பணிக்கொடை என்பது ஒரு ஆண்டுக்கு 15 நாட்கள் என்ற அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. அதுமட்டுமின்றி ஒரு மாதத்தில் 4 நாட்கள் விடுமுறை என்ற அடிப்படையில் 26 நாட்களை மட்டுமே பணி நாட்களாக கணக்கில் கொள்கின்றனர். இதனால் தான் பணிக்கொடை ஃபார்முலாவில் 15/26 என்பது இடம்பெறுகிறது.
பணிக்கொடை கணக்கீட்டில் முக்கியமானதை கவனித்தில் கொள்ள வேண்டும், 6 மாதங்கள் பணி கூட ஓராண்டென கொள்ளப்படும். அதாவது ஒருவர் 7 ஆண்டுகள் 7 மாதங்கள் பணி செய்திருந்தால் அது 8 ஆண்டுகளாக எடுத்துக் கொள்ளப்பட்டு கணக்கிடப்படும்.


Click it and Unblock the Notifications