பெங்களூருவுக்கு அருகில், பிடதி என்ற பகுதியில் இந்தியாவின் முதலாவது மற்றும் மிகப்பெரிய செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப நகரம் அமையவுள்ளது. கர்நாடக அரசு அறிவித்த இந்த கிரேட்டர் பெங்களூரு ஒருங்கிணைந்த நகரத் திட்டம் (GBIT), ஏஐ நகரம் உருவாவதற்கான சாத்தியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் வெளியிட்ட தகவலின்படி, சுமார் 9,000 ஏக்கர் பரப்பளவில் இந்த நகரம் உருவாகிறது. இது work-live-play என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டு, எதிர்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அமையவுள்ளது என அவர் கூறியுள்ளார்.

பெங்களூருவிலிருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் அமையவுள்ள இந்த நகரம், கர்நாடகாவின் இரண்டாவது மத்திய வர்த்தக மாவட்டமாகச் செயல்படும். இதில் 2,000 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு AI சார்ந்த தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களுக்காக ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ராமநகரா துணை ஆணையர் அலுவலகத்தில் விவசாயிகள் மற்றும் அதிகாரிகளிடம் பேசிய சிவக்குமார், இந்தத் திட்டம் வெளிப்படையான முறையில் செயல்படுத்தப்படும் என்பதை தெரிவித்தார். இந்த நகரத்திற்கு நிலம் வழங்குபவர்களுக்கு நியாயமான இழப்பீடு கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.
உலகளாவிய முதலீட்டாளர்களை ஈர்க்கும் நோக்கில், இந்த நகரம் பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப ஸ்டார்ட்அப்களை கொண்டிருக்கும். இதன் மூலம் IT, AI மற்றும் சேவைத் துறைகளில் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகும் என கர்நாடக அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. மேலும் கர்நாடக இளைஞர்களுக்கு வேலைகள்' என்ற கொள்கையை வலியுறுத்தி, கர்நாடக இளைஞர்களை AI சார்ந்த தொழில்களுக்குத் தயார்படுத்த பயிற்சி மையங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறினார்.
1,100 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் பூங்காக்கள் மற்றும் திறந்தவெளிகளுடன், இந்த நகரம் இந்தியாவின் பசுமையான நகரங்களில் ஒன்றாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்தத் திட்டம் முதன்முதலில் 2006-இல் ஹெச்.டி. குமாரசாமியின் ஆட்சிக்காலத்தில் முன்மொழியப்பட்டது. இருப்பினும், பல காரணங்களால் தாமதமானது. 2023-இல் கிரேட்டர் பெங்களூரு பிடதி ஸ்மார்ட் சிட்டி திட்ட ஆணையம், கிரேட்டர் பெங்களூரு மேம்பாட்டு ஆணையமாக மேம்படுத்தப்பட்ட பிறகு இந்தத் திட்டம் மீண்டும் வேகம் பெற்றது.
2025 பிப்ரவரியில் அமைச்சரவை GBIT திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. மார்ச் மாதத்தில் நிலம் கையகப்படுத்துவதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டது. தற்போது இத்திட்டம் ஒன்பது கிராமங்களை ஒருங்கிணைத்து 8,493 ஏக்கர் பரப்பளவுக்கு கட்டமைப்பு பணிகள் நடக்க உள்ளன. இதில் 6,731 ஏக்கர் தனியார் நிலம், 750 ஏக்கர் அரசு நிலம் மற்றும் 1,012 ஏக்கர் நீர்ப்பரப்பு ஆகியவை அடங்கும்.
இந்த நகரம் உருவானால் நம் மாநிலத்தின் லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்புகளால் பயனடைவார்கள், விவசாயிகளுக்கு நியாயமான இழப்பீடு வழங்கப்படும். இது கர்நாடகாவின் எதிர்காலம் பற்றியது என்று சிவக்குமார் கூறியுள்ளார். இந்தியாவின் ஸ்டார்ட் அப் நகரம் ஐடி நகரம் என பெயர் பெற்ற பெங்களூரு விரைவில் ஏஐ நகரத்தையும் கொண்டிருக்க போகிறது.


Click it and Unblock the Notifications