சென்னை: அமெரிக்காவை சேர்ந்த தனியார் ஈக்விட்டி நிறுவனமான ப்ளாக் ஸ்டோன் மற்றும் ஹிராநந்தானி நிறுவனங்கள் இணைந்து கூட்டாக உருவாக்கி இருக்கும் கிரீன்பேஸ் இண்டஸ்ட்ரியல் & லாஜிஸ்டிக் பார்க் (Greenbase Industrial & Logistics Parks) நிறுவனம் சென்னையில் 700 கோடி ரூபாயை முதலீடு செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 21 ஆம் தேதி இந்த கூட்டு நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் ஒரகடம் மற்றும் வடசென்னை பகுதிகளில் 121 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி இருப்பதாகவும் இங்கே 700 கோடி ரூபாய் முதலீட்டினை செய்ய இருப்பதாகவும் கூறியுள்ளன.

ஏற்கனவே இந்த நிறுவனம் 180 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி வைத்துள்ளது. அத்துடன் கூடுதலாக தற்போது 121 ஏக்கர் நிலம் கையகபடுத்தப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்திடம் மொத்தமாக இந்த 391 ஏக்கர் நிலம் இருக்கிறது. மொத்தமாக இங்கே 1500 கோடி ரூபாய் முதலீடு செய்து திட்ட பணிகளை மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரகடத்தில் தொழில் நிறுவனங்கள் சார்ந்த மேம்பாடு அதிகரித்துள்ளது. எனவே இந்த பகுதியில் இந்த நிறுவனம் 135 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி இருப்பது முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. புதிய திட்டங்கள் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 1000 வேலை வாய்ப்புகள் உருவாக கூடும் என சொல்லப்படுகிறது.
சென்னையின் தென்மேற்கு காரிடாரான ஒரகடம் மிகப்பெரிய தொழில் பூங்காவாகும். இது குடியிருப்புகள் மற்றும் வணிகரீதியான கட்டிடங்கள் மற்றும் தொழில் ரீதியான ரியல் எஸ்டேட் மேம்பாடுகளின் ஹாட்ஸ்பாட் ஆக இருந்து வருகிறது.
குறிப்பாக கடற்கரைக்கு அருகில் இருப்பது விமான நிலையத்திற்கு அருகே இருப்பது என இந்த பகுதி தற்போது முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக மாறி வருகிறது. எனவே ஒரகடம் பகுதியில் முதலீடு செய்வதற்கும் தங்களுடைய திட்டப்பணிகளை மேற்கொள்வதற்கும் பல்வேறு நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு வருகின்றன. இங்கே உயர்தரத்திலான உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் அரசும் தீவிரம் காட்டி வருகிறது.
இந்த நிலையில் கிரீன் பேஸ் நிறுவனம் ஏற்கனவே ஒரகடம் பகுதியில் 3 மில்லியன் சதுர அடிக்கு கட்டடங்களை கட்டி டெலிவரி செய்துள்ளது.
நிறுவனங்கள் ,புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை, ஆட்டோமொட்டிவ், உற்பத்தி மற்றும் பொறியியல் துறை சார்ந்த நிறுவனங்களுக்கு கட்டிடங்களை கட்டித் தந்துள்ளது.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் இதனை 20 மில்லியன் சதுர அடி என உயர்த்துவதே தங்களது நோக்கம் என கிரீன்வேஸ் நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications