வாஷிங்டன்: அமெரிக்காவில் அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு கிரீன் கார்டு வைத்திருக்கும் இந்தியர்களுக்கு பல்வேறு நெருக்கடிகளை கொடுப்பதாக செய்தி வெளியாகி உள்ளது.
அமெரிக்காவில் கிரீன் கார்டு வைத்திருக்கும் மூத்த குடிமக்களை குறி வைத்து அமெரிக்க குடியுரிமை துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக கிரீன் கார்டு வைத்திருக்கும் முதியவர்களை கடும் அழுத்தம் கொடுத்து அவர்களாகவே முன்வந்து கிரீன் கார்டுகளை ஒப்படைக்கும் அளவுக்கு குடியுரிமை துறை அதிகாரிகள் கெடுபிடி செய்வதாக சொல்லப்படுகிறது.

அமெரிக்க குடிமக்கள் அல்லாதவர்கள் அமெரிக்காவில் நிரந்தரமாக வாழ்வதற்கும் வேலை செய்வதற்கும் அனுமதிக்க கூடிய ஒரு அடையாள ஆவணம் தான் கிரீன் கார்டு. அமெரிக்காவிற்கு வேலை நிமித்தமாக சென்றுள்ள பலரும் இவ்வாறு கிரீன் கார்டு பெற்று அங்கேயே செட்டிலாகிவிடுகின்றனர். டிரம்ப் நிர்வாகம் இவ்வாறு கிரீன் கார்டு வைத்திருக்கும் முதியவர்களை குறி வைத்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவது, குறிப்பாக அவர்களாகவே முன்வந்து கிரீன் கார்டுகளை ஒப்படைக்கும் படி அழுத்தம் கொடுப்பதாக செய்தி வெளியாகியிருக்கிறது.
தற்போது அமெரிக்காவில் பனிக்காலம் என்பதால் கிரீன் கார்டு வைத்திருக்கும் மூத்த குடிமக்கள் பலரும் தங்களுடைய சொந்த நாடுகளுக்கு சென்று தற்போது மீண்டும் அமெரிக்கா திரும்பிய வண்ணம் இருக்கின்றனர். இவர்களை விமான நிலையங்களிலேயே வைத்து குடியுரிமை துறை அதிகாரிகள் பல்வேறு கெடுபிடிகளை செய்வதாக சொல்லப்படுகிறது. ஆடைகளை முழுமையாக நீக்கி சோதனை செய்வது, உணவு குடிநிர் வழங்காமல் விசாரணை என நீண்ட நேரம் காக்க வைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் கிரீன் கார்டு வைத்திருக்கும் இந்தியர்கள் குறிப்பாக மூத்த குடிமக்கள் இவ்வாறு அழுத்தத்திற்கு ஆளாகி தங்களுடைய கிரீன் கார்டுகளை ஒப்படைக்க கூடாது என சட்டத்துறை சார்ந்த நிபுணர்கள் அறிவுரை வழங்குகின்றனர். அமெரிக்காவில் தங்களது பிள்ளைகளுடன் இருக்கும் பெற்றோர் பனிக்காலத்தில் 180 நாட்களுக்கு தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று வருவது வழக்கம்.
குளிர்காலம் முடிந்து அமெரிக்கா திரும்பும்போது நிச்சயமாக அவரது கிரீன் காடுகள் ஏற்றுக் கொள்ளப்படத்தான் வேண்டும் இதனை காரணம் காட்டி நிராகரிக்க முடியாது என்கின்றனர்.
அமெரிக்க சட்டம் ஒருவர் 350 நாட்களுக்கு மேலாக அமெரிக்காவிலிருந்து வெளியே சென்று எங்காவது தங்கி இருந்தால் தான் கிரீன் கார்டு உரிமத்தை ரத்து செய்வதை பரிசீலிக்க வேண்டும் என கூறுகிறது, எனவே அதற்குள் வெளிநாடு சென்று திரும்பியவர்கள் கிரீன் கார்டுகளை ஒப்படைக்க வேண்டிய தேவை இல்லை என கூறுகின்றனர்.
குடியுரிமை துறை அதிகாரிகளின் மிரட்டலுக்கு பயந்து மூத்த குடிமக்கள் அல்லது இந்தியர்கள் யாரும் தங்களுடைய கிரீன் கார்டுகளை ஒப்படைக்க வேண்டாம் என்றும் எக்காரணம் கொண்டு படிவங்களை படித்து பார்க்காமல் கையெழுத்திட வேண்டாம் என்றும் கூறுகின்றனர். அவ்வாறு மிரட்டப்பட்டால் அவர்கள் நீதிமன்றத்தை நாடலாம் என்றும் அறிவுரை வழங்குகின்றனர்.


Click it and Unblock the Notifications